என்னும் கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்க விரும்பவில்லை. இவர் இவ் எண்ணத்தைத் தம் நண்பர்களிடம் கூறினார். நண்பர்கள் பதறிப் போனார்கள்; புதுவையிலேயே வாழுமாறு இவரை வற்புறுத்தினார்கள். பாரதியார் தம் முடிவை மாற்றிக் கொள்ளாமல் தம் குடும்பத்துடன் புதுவை நகரை விட்டுப் புறப்பட்டார். சுற்றியிருந்த நண்பர்கள் விழியில் நீரொழுக விடை கொடுத்தனுப்பி வைத்தார்கள். ஈ. இறுதி வாழ்வு சிறைசெய்யப்படல் புதுவையிலிருந்து பாரதியார் தம் குடும்பத்துடன் புறப்புடும் செய்தி, சென்னைக் காவல் துறையினர்க்குத் தெரிந்தது. அப்பொழுதுதான் அவர்களுக்கு ஊக்கம் பிறந்தது; பாரதியாரைச் சிறை செய்யக் காத்திருந்தனர். புதுவை எல்லையைக் கடந்து, ஆங்கில ஆட்சிக்குட்பட்ட கடலூரில் பாரதியார் கால் வைத்ததும் காவலர் இவரைச் சிறைசெய்தனர். பாரதியாரின் மனைவியாரும், குழந்தைகளும் பதறினர்; அழுதனர். காவலர் பாரதியாரைக் கடலூர்ச் சிறையில் வைத்தனர். விடுதலை பாரதியார் கடலூரில் சிறைசெய்யப்பட்ட செய்தி சென்னைக்கு சென்றது; தூத்துக்குடிக்கும் சென்றது. நாவலர் பாரதியார் சென்னைக்கு விரைந்தார்; ஆங்கில அதிகாரிகள் சிலரைக் கண்டார்; பாரதியாரின் விடுதலைக்கு முயன்றார். அதே பொழுதில் அப்பொழுது ‘சுதேச மித்திரன்’ ஆசிரியராகப் பணியாற்றிய அரங்கசாமி ஐயங்கார் கடலூர்க்கு விரைந்து, தமக்குத் தெரிந்த வழக்கறிஞர் சிலரை யழைத்துக்கொண்டு, கடலூர் அறமன்றத் தலைவரிடம் சென்று பாரதியாரை விடுதலை செய்யுமாறு வேண்டினார். அறமன்றத் தலைவரோ சென்னைக் காவல்துறையினரை அணுகுமாறு கூறினார். அரங்கசாமி ஐயங்கார் சென்னைக்கு விரைந்து சென்றார். அதற்குள் நாவலரின் முயற்சி பலன் தந்தது. அரங்கசாமி ஐயங்கார் காவல் துறைத்தலைமை அதிகாரியை அணுகிப் பாரதியார் உடல்நலக் குறைவுடையவர் என்றும், உடனடியாகச் சென்னைச் சிறைச் சாலைக்கு மாற்ற வேண்டும். என்றும் வேண்டினார். இறுதியில் நாவலரின் முயற்சியாலும், அரங்கசாமி ஐயங்காரின் முயற்சியாலும், காவல் துறைத் தலைமை அதிகாரி கானிங்டன் துரையின் நல்லெண்ணத் தாலும் சிறைசெய்யப்பட்ட இருபத்துநான்காம் நாள் பாரதியார் விடுதலைபெற்றார். |