பக்கம் எண் :

236கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

கடையத்தில் பாரதியார்

பாரதியார் கடலூர்ச் சிறையிலிருந்து விடுதலையானதும், நேராகத் தம் மனைவி பிறந்த ஊராகிய கடையம் சென்றார். பாரதியாரால் அங்கு இரு நாள்கள்கூட இருக்க இயலவில்லை. இவருடைய பழக்கவழக்கங்களும் போக்கும் இவர்தம் உறவினர் களுக்குப் பிடிக்காமையே இதற்குக் காரணம்.

எட்டயபுரத்தில் பாரதியார்

பின்னர் பாரதியார் தம் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தம்மூராகிய எட்டயபுரம் சேர்ந்தார். அங்குக் கையிலிருந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வரலானார். அவ்வப்பொழுது கவிதைகள் எழுதிச் ‘சுதேசமித்திரன்’ நாளிதழுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்தும் சிறிது பணம் வரும். இவ்வாறு எட்டய புரத்தில் சிறிது காலமே அவரால் வாழ முடிந்தது. வறுமையும் அவர் வாழ்வில் வளர்ந்தது. உடல்நலமும் குறையத் தொடங்கியது.

மீண்டும் சென்னை வாழ்வு

இந் நிலையில் ஒருநாள் சென்னைச் ‘சுதேசமித்திரன்’ அலுவலகத்திலிருந்து அஞ்சல் ஒன்று வந்தது. அவ்விதழின் துணையாசிரியர் பொறுப்பைப் பாரதியார் ஏற்றுக்கொள்ளுமாறு அவ்வஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது பாரதியார் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள இசைந்து நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு தம் குடும்பத்தினருடன் சென்னையில் குடிபுகுந்தார்: ‘சுதேசமித்திரன்’ துணையாசிரியர் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றிவந்தார்.

யானை தந்த துயரம்

சென்னையில் பாரதியார் வாழ்ந்துவந்த பகுதி திருவல்லிக் கேணியாகும். அங்குள்ள பார்த்தசாரதி கோவிலுக்குப் பாரதியார் சென்று வருதல் வழக்கம். அங்குள்ள யானைக்குப் பழமும், தேங்காய் மூடியும் கொடுப்பதைப் பாரதியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். யானை அதனை வாங்கியுண்ணும். பாரதியார் அதனைக் கண்டு மகிழ்வார். ‘கொத்தித் திரியும் கோழி,’ ‘எத்தித் திருடும் காக்கை,’ ‘பாலைப் பொழிந்து தரும் பசு,’ ‘ வாலைக் குழைத்து வரும் நாய்’ - போன்ற உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று பாடியவரல்லரோ பாரதியார்! அவர் யானையிடம் அன்பு காட்டியதில் வியப்பேது?