பக்கம் எண் :

பாடுங்குயில்கள்239

படைவீரர்களாக ஆக்கிவிட்ட இப் பெரும் பேராசானை இளைய பாரதம் அறியாமல் இருக்கலாமா? பாவலர் பரம்பரை தோன்ற வேண்டும் என்று கனவு கண்டவர் விடுதலைக் குயிலாகிய சுப்பிரமணிய பாரதியார். அக் கனவை நனவாக்கிய பெருமை பாட்டுலகத் தந்தை பாரதிதாசனையே சாரும்.

அ.கனக சுப்புரத்தினம்

இளமையும் கல்வியும்

கிழக்குக் கடற்கரையோரத்திலே, புதுச்சேரி என்னும் ஓர் அழகிய நகரம் இருக்கிறது. அந் நகரில், கனகசபை என்பவர் பெரும் வணிகராக விளங்கி வந்தார். மகாலட்சுமி அம்மையார் அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக வாய்க்கப்பெற்றார். கி.பி. 1891 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ஆம் நாள், இவர்களுக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. இவர்கள் சீரும் சிறப்புமாய் அம் மகவை வளர்த்து வந்தனர். சுப்பு ரத்தினம் இளமையிலேயே பாடலில் நாட்டம் உடையவராக இருந்தார்; இயற்கை யழகுகளைக் கண்டு மகிழ்வதில் பெருவிருப்பங் காட்டினார்; சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் உடையவராகத் தோன்றினார்.

அக் காலத்தில் புதுச்சேரி பிரஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்துவந்தது. அதனால் பள்ளிகளில் பிரஞ்சு மொழியே முதன் மையும், உரிமையும் பெற்றிருந்தது. அம் மொழியை நன்கு கற்றுவந்த சுப்புரத்தினத்திற்கு இயற்கையிலே தமிழார்வம் இருந்தது; மேலும், இசையிலும் நாடகத்திலும் பற்று மிகுந்திருந்தது. அதனால் தமிழ்க் கல்வி நன்கு கற்க வேண்டும் என்னும் எண்ணம் இவருள்ளத்தில் மேலோங்கி நின்றது. தம் மகனுடைய எண்ணத்தை அறிந்துகொண்ட தந்தையார் அதற்குத் தக்க ஏற்பாடு செய்தார்.

சுப்புரத்தினம் பள்ளிப் படிப்புடன் தமிழ்க் கல்வியும் பயின்றுவந்தார். இவருக்குத் தமிழ் கற்பிக்கும் பொறுப்பை ஏற்ற முதல் ஆசிரியர் பு.ஆ.பெரியசாமிப் புலவர் என்ற தமிழ்ப் பேரறிஞர் ஆவார். சுப்புரத்தினம் தமிழில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தமை யால், தமிழ்க் கல்வி நாளுக்குநாள் வளர்ந்து வந்தது. அடுத்து, இவர் புலவர் சி.பங்காரு என்பவரிடமும் தமிழ்க் கல்வியைக் கற்றுவந்தார்.