விருத்தப்பாவிற்குப் புத்துயிரும் பெருமதிப்பும் உண்டாகச் செய்தவர்களுள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஒருவர். புரட்சிக் கவிஞர் கவிதை நூல்கள், உரைநடை நூல்கள், நாடக நூல்கள் எனப் பலப்பல எழுதித் தந்துள்ளார். கம்பருடைய கவித்திறனையும் கவிச்சிறப்பையும் கண்டு வியந்தவர்கள், அவரைக் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்று வழங்கினர். அதைப்போலவே புரட்சிக் கவிஞருடைய பாட்டு வன்மையையும் பாடற் சிறப்பையும் உணர்ந்த மக்கள், இவரைப் ‘பாவேந்தர்’ என்று வழங்கத் தொடங் கினர். புரட்சிக் கவிஞர் பாவேந்தரனார். படைப்புகள் பாவேந்தர் நமக்குப் படைத்தளித்த நூல்கள் பல. அவற்றுள் பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, தமிழியக்கம், அழகின் சிரிப்பு, இசையமுது, பாண்டியன் பரிசு ஆகிய நூல்கள் மிகச் சிறந்தனவாகும் பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூல் பல்வேறு சமயங்களில் பாடப்பட்ட பாடல்களின் தொகுதி. இந்த நூலே, பாரதிதாசன் ஒரு பெருங்கவிஞர் என்பதைத் தமிழ்நாட்டிற்கு உணர்த்திற்று. இவருடைய பாடல்கள் மேலும் இரண்டு தொகுதி களாக வெளிவந்துள்ளன. குடும்ப விளக்கு என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் விளக்குப்போன்ற நூல். ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்னுங் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல் இது. குடும்பம் எப்படி நடத்தவேண்டும் என்று, குடும்பத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஓர் ஆசான் போன்றது இந்தநூல். ஒவ்வொருவரும் தவறாமல் படித்துணர வேண்டிய நூல். பாரதிதாசன் படைப்புகளுள் இது புதுமையான படைப்பாகும்; தனித் தன்மை வாய்ந்தது ஆகும். தமிழியக்கம் தமிழ்நாட்டில் தமிழ்மொழி எந்தெந்தத் துறைகளில் ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறது, எங்கெங்கு நம் மொழி தலைமை பெறவேண்டும், தமிழ் தலைமை பெற யார்யார் என்னென்ன பணிகளில் ஈடுபடவேண்டும் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி, ஓர் இயக்கம்போல நின்று வழிகாட்டும் ஒப்பற்ற நூல் |