248 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
இது. தமிழ்நாட்டு இளைஞர் ஒவ்வொருவரும் இதனைப் படித்து உணர்ந்து, நெஞ்சில் பதியவைத்து, அஃது எடுத்துக் கூறும் நெறிமுiறகளைச் செயற்படுத்தினால், தமிழ் மொழி தனக்குரிய நிலையையும் மேன்மையும் அடைந்தே தீரும். அழகின் சிரிப்பு என்னும் நூல் பாரதிதாசன் உலகப் பெருங் கவிஞர் என்பதை உலகிற்கு உணர்த்தும். கிளி, புறா, கடல், ஆறு, ஆலமரம் முதலான தலைப்புகளில், இயற்கைப் பொருள் களைப் பற்றி இவர் இந் நூலில் அழகாகப் பாடியிருக்கிறார். பாவலர் களுடைய கண்களுக்கு ஒரு தனி ஆற்றல் உண்டு. எப்பொருளையும் ஊடுருவிச் சென்று காணும் ஆற்றல்தான் அது. அதனால் நமக்குப் புலனாகாது மறைந்துகிடக்கும் அழகுகள், அவர்களுடைய விழிகளுக்குப் புலனாகும். அவ்வாறு புலனாகும் அழகுகளை அவர்கள் கண்டு தாமும் சுவைத்து, நம்மையும் சுவைக்கவைத்து மகிழச் செய்வார்கள். பாரதிதாசன் இவ்வாறு சுவைத்து எழுதிய ‘அழகின் சிரிப்பு’ நம்மையும் இயற்கையழகிலே தோயவைக் கின்றது. இசையமுது என்னும் இப் பெயரைக் கேட்டவுடனே, இந் நூலின் இனிமை நமக்குப் புலப்படுகின்றது. இசையே இனிமை யானது; அதுவும் அமுதாகப் பொழிந்துவிட்டால் இனிமைக்குக் குறைவேது? ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாரதிதாசன் பாடினார். அவருடைய இசைப்பாட்டுக்கும் அமுதென்று பேர் என்று நாம் பாடலாம். அவ்வளவு இனிமையான இசைப் பாடல்கள் இந்த நூலுக்குள் அமைந்திருக்கின்றன. இவர் புரட்சிக்கவிஞராதலின், மாடு மேய்ப்போன், வண்டி ஓட்டுபவன், ஆலைத் தொழிலாளி, கூடை முறம் பின்னுவோர் என்று இத்தகைய மக்களையே ‘இசையமுதில்’ பாடியிருக்கின்றார். இவருடைய பாடல்கள் பல திரைப்படங்களிலே முழங்கிவருகின்றன. பாண்டியன் பரிசு என்பது முழுதும் விருத்தப் பாக்களால் ஆன சிறந்த காப்பிய நூல். இக்காப்பியத்தில் வீரம், நகை முதலிய சுவைகள் நிறைந்திருக்கும்; நிலையாமையைப்பற்றிச் சொல்லும் பகுதி சிறப்பாக இருக்கும்; மூடநம்பிக்கைகளை அழகாக நகைச் சுவையுடன் எடுத்துக்கூறும் பகுதியைப் படித்துப்படித்து மகிழலாம். இவை தவிர வேறு காப்பியங்கள், நாடகங்கள், பாடல்கள், உரைநடை நூல்கள் முதலியவற்றையும் பாரதிதாசன் எழுதியுள்ளார். |