பக்கம் எண் :

பாடுங்குயில்கள்249

இவ்வாறு உயர்ந்த நூல்களை எழுதித் தமிழ்மொழிக் காவலராய்ப் பாட்டுலகில் முடிசூடா மன்னராய் விளங்கி வந்த பாரதிதாசனை, மக்கள் ‘பாவேந்தர்’ என்னும் பெயரிட்டழைக்காமல், வேறு எப்பெயரால் அழைப்பர்.

உ. உளப்பாங்கு

குழந்தை நெஞ்சம்

பாவேந்தர் பாரதிதாசன் ஒரு பிறவிக் கவிஞர். அவருடன் பழகியவர் இதனை நன்கு அறிவர். இவர் பிறவிக் கவிஞராக இருந்தமையால். குழந்தை உள்ளம் படைத்தவராக விளங்கினார். உலகியலுக்கும் இவருக்கும் நீண்ட இடைவெளியிருக்கும். யார் எதைச் சொன்னாலும் இவர் நம்பிவிடுவார். யார் உண்மையானவர், யார் பொய்ம்மையானவர் என்பதே இவருக்குத் தெரியாது. எளிதில் யாரையும் நம்பும் இயல்புடையவராக இருந்தமையால், பொய்ம்மையானவரையும் இவர் நம்பிவிடுவார். நம்பிவிட்டால், அவர்களை ‘நம்பி பிள்ளை’ என்று உரிமையுடனே குறிப்பிடுவார். கவிஞர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் பறந்துகொண்டே யிருப்பவர்கள். அதனால் இந்த உலக நடவடிக்கைகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு காண்பது அரிது.

பணிவுள்ளம்

‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்பது வள்ளுவர் வாய் மொழி. இவ் வாய்மொழியை நன்கு உணர்ந்தவர் பாவேந்தர். அதனால் எல்லாரிடத்தும் பணிவு காட்டும் பண்பு இவரிடம் குடி
கொண்டிருந்தது. தமக்கு வழிகாட்டியாக இருந்த பாரதி யாரிடம் இவர் பெருமதிப்பு வைத்திருந்தார். இவர் பாரதியாரைச் சிறப்பித்துப் பாடும் இடத்தில், ‘திங்களைக் கண்ணிலான் சிறப்பிப்பதுபோல நான் உன்னைச் சிறப்பிக்க வந்துளேன்’ என்னுங் கருந்தமையப் பாடியுளார். இப் பகுதியில் பாவேந்தருடைய பணிவுள்ளம் ஒளி வீசுகின்றது.

நன்றியுள்ளம்

இவர் தாம் இயற்றிய ‘குடும்ப விளக்கு’ இரண்டாம் பகுதியை, நிறைதமிழாய்ந்த மறைமலையடிகளுக்குக் காணிக்கையாக்கி