தமிழ் நெஞ்சம் பாவேந்தர் தமிழின் உருவமாகவே விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ் என்றால் அவருக்கு எவ்வளவு ஆசையோ? ‘உடல் உயிர் செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்’ என்று பாவேந்தர் பாடுகின்றார். இவ்வடிகளால் தாம் வேறு, தமிழ்வேறு எனும் வேறுபாடேயின்றி, தமிழாகவே தம்மைக் கருதும் நெஞ்சம் நமக்குத் தெரிகிறது. ஏனெனில், உடலையும் உயிரையும் தமிழுக்கென்றே ஒப்படைத்துவிட்டார் பாவேந்தர். மற்றோரிடத்தில் இவர். ‘ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு உவப்புடன் ஈவேன்’ என்று பாடுகின்றார். இறுதிநாள் தமிழே வடிவமான பாவேந்தர் சிலர் சொல்லை நம்பித் தமது ‘பாண்டியன் பரிசு’ என்னும் காப்பியத்தைத் திரைப்பட மாக்கக் கருதிச் சென்னைக்குச் சென்று, பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி, 21-04-1964இல் நம்மை விட்டுப் பிரிந்தார். கனக சுப்புரத்தினம், பாரதிதாசனாகி, பிறகு புரட்சிக் கவிஞராகி, முடிவில் பாவேந்த ராகித் தம் புகழ் நிறுத்தித் தாம் மறைந்து விட்டார். அவர்தம் பிரிவால் வாடிய தமிழ்மக்களுக்கு, அவருடைய பாடலே ஆறுதல் தந்தது. ஆறுதல் தந்த அந்த மொழி, ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்பதே. |