பக்கம் எண் :

32கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

தெரிநிலை வினைப் பெயரெச்சமும், ‘இல்லாத’ என்ற எதிர்மறைக் குறிப்புவினைப் பெயரெச்சமும் இரு திணைப் பொதுவினை களாகும்.

இலக்கண விதி: செய்த-செய்கின்ற-செய்யும் என்ற மூவகைப் பட்ட சொல்லின்கண், முறையே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களும் தோன்றி, வினை முற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாது, அப்பாலுடன் செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் அறுவகைப் பொருட் பெயரும் ஒழிய நிற்பன, பெயரெச்சவினை வினைக்குறிப்புக் களாகும். (இவை இருதிணைப் பொதுவினைகளாகும்.)

(வினையெச்சவினை வினைக்குறிப்புக்கள்)

(இருதிணைப் பொதுவினை)

உண்டு வந்தான்-வந்தது(உடன்பாடு)

உண்டு வாரான்-வாராது(எதிர்மறை)

மேற்கண்டவாறு உடன்பாட்டிலும், எதிர்மறையிலும்; வருகின்ற ‘உண்டு’ என்னும் தெரிநிலை வினையெச்சம், இரு திணைக்கும் பொதுவினையாக வரும்.

அருளின்றிசெய்தான்-செய்தது(உடன்பாடு)

அருளின்றிசெய்யான்-செய்யாது(எதிர்மறை)

மேற்கண்டவாறு உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் வருகின்ற ‘அருளின்றி’ என்னும் குறிப்பு வினையெச்சம், இருதிணைக்கும் பொது வினையாக வரும்.

இங்ஙனமே, ‘செய்து-செய்பு’ என வருகின்ற வினையெச்ச வாய்பாட்டுள் அடங்கும் வினையெச்ச சொற்கள் எல்லாம் இரு திணைப் பொதுவினைகளாகும்.

இலக்கண விதி: செய்பு, செய்து முதலியவாக விதந்து சொல்லப்படும் வாய்பாடுகளிலே தொழிலங்காலமும் விளங்கி, வினை முற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாமல், அப் பாலுடனே வினை ஒழிய நிற்பன, வினையெச்சவினை வினைக் குறிப்புக்களாகும். இவை இரு திணைப் பொதுவினை எனப்படும்.