பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

எதை நெய்தான்? என்று வினாவினால், ஆடையை என்று விடை வருகின்றது. எனவே, ஆடை செயப்படுபொருளாகும். எதைச் சென்றான்? என்று வினவினால், அதற்கு விடை இல்லை. எனவே, சென்றான் என்ற வினைக்குச் செயப்படுபொருள் இல்லை.

எனவே, தெரிநிலைவினை செயப்படுபொருள் பெற்றும், பெறா மலும் வரும். செயப்படுபொருள் பெற்ற வினை, ‘செயப் படுபொருள் குன்றாவினை’ என்றும், செயப்படுபொருள் பெறாத வினை, ‘செயப்படு பொருள் குன்றியவினை’ என்றும் கூறப்படும்.

உண்டான், படித்தோம், கண்டேன்

இவையும், இவை போல்வனவுமாகிய வினைச்சொற்கள் செயப்படுபொருள் குன்றாவினை எனப்படும்.

நடந்தான், வந்தான் பறந்தது

இவையும், இவை போல்வனவுமாகிய வினைச்சொற்கள் செயப்படுபொருள் குன்றியவினை எனப்படும்.

இலக்கண விதி: கருத்தாவும், கருவியும், இடமும், செயலும், காலமும், செயப்படுபொருளுமாகிய அறுவகைப் பொருளையும் தருவது தெரிநிலைவினைச் சொல்லாகும்.

செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம்
செய்பொரு ளாறுந் தருவது வினையே. (ந-நூற்பா 320)

(2) குறிப்புவினை

இவன் பொன்னன்
அவன் கண்ணன்

இவ் வெடுத்துக்காட்டுக்களில் உள்ள பொன்னன், கண்ணன் என்பன வினைமுற்றுக்களாகும். ஆனால், இவை கருத்தாவை மட்டும் உணர்த்தித் தொழிலையும் காலத்தையும் வெளிப்படை யாகக் காட்ட வில்லை. எனினும், பொன்னை உடையவனாக இருந்தான்; இருக்கின்றான்; இருப்பான் எனவும் கண்ணை உடைய வனாக இருந்தான்; இருக்கின்றான்; இருப்பான் எனவும் பொருள் தரும்பொழுது, குறிப்பால் முக்காலத்தையும் காட்டும்.