72 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘சால-உறு-தவ-நனி-கூர்-கழி’ என்னும் ஆறு உரிச்சொற்களும், ‘மிகுதி’ என்ற ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும். இவை, ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் எனப்படும். இன்னும், ‘சொல்’ என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களும், ‘ஓசை’ என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களும் உள. இலக்கண விதி: சால-உறு-தவ-நனி-கூர்-கழி என்ற இவ் வுரிச்சொற்கள் ஆறும், மிகுதியாகிய ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும். சால வுறுதவ நனிகூர் கழிமிகல். (ந-நூற்பா 456.) (பலகுணந் தழுவிய ஓர் உரிச்சொல்) கடிநகர்-காவலை உடைய நகரம் (காப்பு-காவல்) கடிவேல்-கூர்மையான வேல் (கூர்மை) கடிமாலை-வாசனை உடைய மாலை (மணம்-நாற்றம்) கடிமார்பன்-விளங்கும் மார்புடையவன் (விளக்கம்) கடிபேய்-அஞ்சத்தக்க பேய்(அச்சம்) கடியரண் - சிறந்த அரண் (சிறப்பு) அம்புகடிவிதும்-அம்பை விரைவில் விடுவோம் (விரைவு) கடிகாற்று-மிகுந்த காற்று (மிகுதி) கடிமணம்-புதுமணம் (புதுமை) கடிமுரசு-ஒலிக்கும் முரசு (ஆர்த்தல்-ஒலித்தல்) கடிமது-நீக்கத்தக்க மது (வரைவு-நீக்குதல்) கடி வினை-திருமண வேலை ( மன்றல்-திருமணம்) கடி மிளகு - கரிக்கின்ற மிளகு (கரிப்பு-காரம்) மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் கடி என்னும் ஓர் உரிச்சொல் காப்பு, கூர்மை, நாற்றம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மன்றல், கரிப்பு என்ற பதின்மூன்று குணத்தையும் உணர்த்தி வந்த பலகுணந் தழுவிய ஓர் உரிச்சொல்லாகும். |