ஒரோவழி, மெல்லினம் வந்து புணரும் பொழுது, தேன் மொழி என அல்வழியில் இயல்பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டுத் தேமொழி எனவும் புணரும். வேற்றுமையில், தேன் மலர் என இயல்பாகப் புணர்தலே அன்றி, ஈன்று ன் கெட்டுத் தேமலர் எனவும் புணரும். ஒரோவழி, வல்லினம் வந்து புணரும் பொழுது, தேன்குழம்பு என அல்வழியில் இயல்பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டு வருமொழி வல்லினம் மிகப் பெற்றுத் தேக்குழம்பு எனவும், அவ் வல்லினத்திற்கு இனமான மெல்லினம் மிகப் பெற்றுத் தேங்குழம்பு எனவும் புணரும். வேற்றுமையில், வல்லினம் வந்து புணரும் பொழுது, தேன் கடம் என இயல்பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டு வருமொழி வல்லினம் மிகப் பெற்றுத் தேக்குடம் எனவும், அவ் வல்லினத்திற்கு இனமான மெல்லினம் மிகப் பெற்றுத் தேங்குடம் எனவும் புணரும். இடையினம் வந்து புணரும்பொழுது, தேன்யாது என அல்வழியிலும், தேன்யாப்பு என வேற்றுமையிலும் இயல்பாகவே புணரும. இலக்கண விதி: தேன் என்னும் சொல்லின் முன் மூவின மெய்களும் வந்து புணரும்பொழுது அல்வழி வேற்றுமை ஆகிய இருவரிகளிலும் இறுதி னகரம் இயல்பாதலும், மெல்லினம் வரின் இறுதி னகரம் இயல்பாதலே அன்றிக் கெடுதலும், வல்லினம் வரின் இறுதி னகரம் இயல்பாதலே அன்றிக் கெட்டு, வந்த வல்லினமாதல் அதற்கினமாதல் மிகுதலும் ஆம். தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி (ந-நூற்பா 214.) 2. செய்யுள் விகாரம் “தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றணைத் தூறு மறிவு.” |