பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

இத் திருக்குளறில் ‘தொட்டது, கற்றது’ என நிற்கவேண்டிய சொற்கள், ‘தொட்டு, கற்று’ எனத் தொகுத்தல் விகாரம் பெற்றுள்ளன. இங்ஙனம் செய்யுளில் அடி, தொடை முதலானவைகளை நோக்கிச் சொற்கள் பல விகாரங்களைப் பெற்று வரும். அங்ஙனம் வருவது செய்யுள் விகாரம் எனப்படும்.

செய்யுள் விகாரம், வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்ற ஆறுடன், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்ற மூன்றும் சேர்த்து ‘ஒன்பது’ வகைப்படும். அவை வருமாறு:

1. வலித்தல் விகாரம்

“குறுத்தாட் பூதஞ் சுமந்த”

குறுமை+தாள்=குறுந்தாள் எனப் புணர வேண்டும். அங்ஙனம் புணராது ந் என்ற மெல்லெழுத்து த் என்ற வல்லெழுத்தாக விகாரப் பட்டுள்ளது. எனவே, வலித்தல் விகாரம் எனப்படும்.

2. மெலித்தல் விகாரம்

“தண்டையி னினக்கிளி கடிவோள்”

இத் தொடரில் தட்டை எனற்பாலது, தண்டை என ட் என்ற வல்லெழுத்து ண் என்ற மெல்லெழுத்தாக விகாரப்பட் டுள்ளது. எனவே, இது மெலித்தல் விகாரமாகும். (தட்டை-கிளியோட்டும் கருவி).

3. நீட்டல் விகாரம்

“ஈசன் எந்தை இணையடி நீழலே”

இத் தொடரில் ‘நிழலே’ எனற்பாலது ‘நீழலே’ எனக் குறில், நெடிலாக நீண்டு விகாரப்பட்டுள்ளது. எனவே, இது நீட்டல் விகாரமாகும்.

4. குறுக்கல் விகாரம்

“திருத்தார் நன்றென்றேன் றியேன்”

இத் தொடரில் ‘தீயேன்’ எனற்பாலது ‘தியேன்’ என நெடில், குறிலாக விகாரப்பட்டுள்ளது. எனவே, இது குறுக்கல் விகாரமாகும்.