பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்95

5. விரித்தல் விகாரம்

“வெதிரி னெல்விளை யும்மே”

இத் தொடரில் ‘விளையுமே’ எனற்பாலது ‘விளையும்மே’ என, இடையே ம் என்ற மெய்யெழுத்து விரிந்து விகாரப்பட்டுள்ளது. எனவே, இது விரித்தல் விகாரமாகும்.

6. தொகுத்தல் விகாரம்

“சிறியிலை வெதிரினெல்”

இத் தொடரில் ‘சிறியவிலை’ எனற்பாலவது ‘சிறியிலை’ என, யகர உயிர்மெய் தொகுத்தல் விகாரப்பட்டுள்ளது. எனவே, இது தொகுத்தல் விகாரமாகும்.

7. முதற்குறை

“மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி”

இத் தொடரில் ‘தாமரை’ எனற்பாலது ‘மரை’ என முதல் எழுத்துக் குறைந்து நிற்கிறது. எனவே, இது முதற்குறை யாகும்.

8. இடைக்குறை

“ஓதி முதுபோத்து”

இத் தொடரில் ‘ஒந்தி’ எனற்பாலது ‘ஓதி’ என இடையில் உள்ள நகரமெய் குறைந்து நிற்கிறது. எனவே, இஃது இடைக்குறை யாகும்.

9. கடைக்குறை

“நீலுண் டுகிலிகை கடுப்ப”

இத் தொடரில் ‘நீலம்’ எனப்பாலது ‘நீல்’ எனக் கடைக் குறைந்துள்ளது. எனவே, இது கடைக்குறை யாகும்.

இவை தவிர, உரையிற்கோடல் என்ற வகையில், விதியின்றி வருகின்ற தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், எழுத்து நிலைமாறுதல், சொல்நிலைமாறுதல் முதலாயினவும் செய்யுள் விகாரமாகக் கொள்ளப்படும்.