பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்205

'ஒரு குறிப்பிட்டநோக்கங் கொண்டு வரையப்படும் எந்த நூலும் கால வெள்ளத்தை எதிர்த்து நீந்தி நிற்காது என்பது திண்ணம்....

மணிமேகலையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, வரிவரியாகக் காட்சிகாட்சியாக அதைத் தொடர்ந்து செல்லு கின்ற இந்தக் கவிஞரின் அகவலில் ஓர் இன்பம் பெருகு
கின்றது. சிறந்த சொல்லாட்சி மிளிர்கின்றது கவிதையுள்ளம் பேசுகின்றது. ஆனால் தமிழ்ப் பெருமையைப் பரப்புவதற்கே உற்ற கருவியாய் இந்தக் காப்பியம் அமைந்து விட்டது.... தற்காலத் தமிழர் கிளர்ச்சியில் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் என்பதற்கு ஐயம் இல்லை. சில ஆண்டுகள் கழித்து வரலாற்றுக் கண்ணோடு பார்க்கிறவருக்கு இந்நூல் பயன்படக் கூடும். அதுவும் ஒரு பணிதானே!

அந்தி மாலைச் சிறப்பைப்பற்றி இவர்தரும் சித்திரம் நம் மனத்தை விட்டு அகலாது. இயற்கை யெழிலில் இவர் ஈடுபடு கிறார். இந்த இலக்கியயாழ் முழுவதும் இன்பமாய் ஒலிப்பது நம் தமிழணங்கின் தெய்வக்குரல்தான். அக்குரலினுக்குச் செவி சாய்த்துத் தமிழ்த்தேவியை நாம் வணங்குவோமாக'

-ரா.ஸ்ரீ.தேசிகன்.

கொழும்பு - வீரகேசரி 8.8.65இல் எழுதிய மதிப்புரையில் ஒரு பகுதி:

'கவிஞர் முடியரசன் ஏற்கனவே தமிழ் மக்களுக்குப் பரிச்சய மானவர். துள்ளும் நடையில் எழுதப்பட்டுள்ள சுவை நிறைந்த (பூங்கொடிக்)காவியம் படிக்கப்படிக்க இன்பம் கூட்டுகிறது. 'அன்று மணிமேகலை வாயிலாகப் பௌத்த மதத்தைப் பரப்பச் சீத்தலைச் சாத்தனார் முன் வந்தார். இன்று, இப்பூங்கொடி வாயிலாகத் தமிழ் மொழியைப் பாரெங்கும் பரப்பக் கவிஞர் முடியரசன் முன் வந்துள்ளார்' - என்று பதிப்பாசிரியர் கூறும் வார்த்தை பலிக்கவேண்டும். பலித்தால் உலகத்தவர் பூங்கொடியை ஒரு சிறந்த காவியமாக மதிப்பார் என்பதில் ஆட்சேபணை இல்லை'

- 'தியாகி'