10 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
அரசு! பொதுவான செய்திகளையே எழுதி விட்டேன். நிற்க! நீ உயர்நிலைப் பள்ளிப் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் கல்லூரியில் இடம் பெறுவதற்குப் பட்ட பாட்டை நீ நன்கறிவாய். தகுதியில்லாரிடங் கூடக் கெஞ்சி நிற்க வேண்டிய நிலையாகி விட்டது. எல்லாம் உன் நன்மைக்குத்தான். நன்றாக நீ படித்து முன்னுக்கு வர வேண்டுமே என்ற எண்ணத்தினாற்றான் தமிழை வெறுத்துப் பேசும் அந்தப் புல்லனிடமும் போக வேண்டியதாயிற்று, தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய பணியை என்னால் இயன்றவரை ஆற்றுகிறேன். மகன், தந்தைக்கு ஆற்றும் உதவியை நீ மறந்து விடாதே. கல்வி பயிலுவதில் கண்ணும் கருத்துமாக இரு. உடனுறை நண்பர்களிடம் பகைத்துக் கொள்ளாதே. நெருங்கியும் பழகி விடாதே. நெருங்காமலும் விட்டு விலகாமலும் பழகு. நல்ல நண்பர் கிடைப்பதரிது. ஆராய்ந்து பார்த்துப் பழகு. நல்ல நண்பர் ஓரிருவரே வாய்ப்பர். நல்ல நண்பர் கிடைத்து விட்டால் விட்டு விடாதே; ஒட்டிக்கொள். ஆசான் உரைத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் புலமை, காற்பங்குதான் உண்டாகும்; மற்றைய மாணவருடன் பழகுவதால் மற்றொரு காற்பங்கு புலமை பெறுகிறோம். நம் முன்னோர் நன்குணர்ந்தே இம்முறையைக் கூறியுள்ளனர். ஆதலின் உன் கல்விக்கு உறுதுணையாக வாய்க்கும் நண்பரைப் பற்றிக் கொண்டு பழகு. வெறும் பேச்சுக்குப் பழகுவோரிடமிருந்து மெல்ல மெல்ல விலகி விடு. பயனில் சொற் பாராட்டுவோர் தொடர்பு வேண்டா. விரும்பிப் போற்றும் கொள்கை உனக்கென்று ஒன்றிருக்கு மானால் அதை எல்லாரிடமும் வெளிக்காட்டுதல் கூடாது. படிப்பு முடியும் வரை மனத்துள் மறைத்து வைப்பதுதான் நல்லது. மற்றொன்று, மிக மிக இன்றியமையாதது. ஆசிரியர் களிடம் பழகும் போதும் முன்னெச்சரிக்கை யாகப் பழகு. எல்லா ஆசிரியரி டமும் விரும்பிப் பழகு. அனைவரையும் மதித்துப் போற்று, இருப்பினும் ஆசிரியருள் ஓரிருவரைத்தான் உள்ளன்புடன் விரும்ப முடியும். அதுதான் இயல்பும் கூட. அவ்வாறு உன் உள்ளம் விழையுமானால், அவ்விழைவு ஏனைய ஆசிரியர்களுக்குத் தெரிதல் கூடாது. ஏனெனில் நான் கேள்விப் பட்ட அளவில் ஆசிரியர்களிடையே ஒற்றுமை இல்லையாம். ஒவ்வொருவரும் தாம்தாம் பேராசிரியர் என எண்ணித் திரிகின்றனராம். |