அரசு! நம்மவர், தம்மிடையே இருந்து வரும் கருத்து வேறு பாடுகளைப் பெரியனவாக்கி, ஒருவரையொருவர் நேரிற் காண விழையாமல், தனி மனிதனைக் கண்டபடி ஏசிப் பிளவுபட்டு வருவதையே காண்கின்றோம். இதனால் அந்தப் பிளவுகளில் பகைமைகள் எளிதாக நுழைந்து வேர்விட்டுச் செழித்து வளர்கின்றன. நம் மொழிக்கும் நாட்டுக்குமே தீங்கு நேரிடுகிறது. இதை உணராமல் நாட்டையும் மொழியையும் முன் வைத்து எண்ணாமல், அவர் சொன்னார் அதனால் அது தவறு, இவர் சொன்னார் இதனால் இது சரியன்று என்று மறுத்துப் பேசி மாற்றார்க்கே இடமளித்து விடுகி றோம் எடுத்துக் காட்டாக ஒன்று சொல்லுகிறேன். கோவிலில் தமிழ் முழங்க வேண்டுமென்று காவிச் சட்டைக் காரர் சொன்னாலென்ன? கருப்புச் சட்டைக்காரர் சொன்னா லென்ன? எவர் சொன்னாலும் தமிழுக்குத்தானே சொல்கின்றனர் என்று கருதுதல் வேண்டும். இவ்வாறு எண்ணுவதை விடுத்துக் காவிச் சட்டை நமக்குப் பிடிக்க வில்லையென்றால் அவரைக் கண்டபடி பேசுகிறோம். நாத்திகர் என்று கூட நவிலுகின்றோம். அடடா! கோவிலுக்குள் தமிழா? முன்னோர் முறையைப் புறக் கணித்து நடப்பதா? தேவபாடையை விடுத்துத் தமிழைப் புகுத்தினால் பேரிழிவல்லவா விளையும்! என்றெல்லாம் பிதற்றுகிறோம். கருப்புச் சட்டை பிடிக்கவில்லையென்றால், ஆ, இவனா கோவிலைப் பற்றிப் பேசுவது? கடவுளையே ஒழிக்க வேண்டு மென்று பேசுபவனாயிற்றே இவன் தமிழின் பெயரைச் சொல்லிக் கோவிலுக்கு வெடிவைக்கப் பார்க்கிறான் என்று கதறுகிறோம். உண்மையில் சட்டையையும் ஆளையும் முன் வைத்துப் பேசுகிறோமே தவிர, மொழியை முன் வைத்துப் பேசுவதில்லை. மொழியை முன் வைக்காமல் ஆளை முன் வைத்துப் பேசுவதால் விளையும் பயன் என்ன? தமிழ் மொழி, தமிழ் நாட்டுக் கோவிலுக்குள் நுழைய முடியாத தாழ்த்தப்பட்ட மொழியாகி விடுகிறது. பிற மொழியின் ஆட்சியே நிலை நிற்கிறது. நம்மிடையே உள்ள பகையுணர்வால் நமக்கு நாமே நலிவுகளை உண்டாக்கிக் கொள்கி றோம். இத்தகைய பிளவு மனப்பான் மையை ஒழித்து விட்டு, மொழியும் நாடும் முன்னேற வேண்டுமென்ற ஒரே குறிக் கோளில் நாம் முயலல் வேண்டும். வளர்ந்து வரும் பரம்பரை இவ்வெண்ணத் துடன் வளர்வதாகுக. |