8 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
2 ஒற்றுமை வேண்டும் அன்புள்ள அரசு, உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அங்கு நிகழ்ந்த திருக்குறள் விழா நிகழ்ச்சிகள் பற்றி யெழுதியிருந்தாய். நானும் செய்தித்தாளில் கண்ணுற்றேன்; களிப்புற்றேன். அறிஞர் அண்ணா, தவத்திரு. குன்றக்குடி அடிகளார், தமிழ்வேள் பி.டி.இராசன், மொழித்துறை வல்லுநர் தேவநேயப் பாவாணர், இன்னோரன்ன பெரியோர்கள் ஒரே மேடையில் கூடி நின்று உரையாற்றினர் என்றும், கருத்து வேறுபாடுகளைக் காட்டிக் கொள்ளாமல், ஒருவர் கருத்தை ஒருவர் தழுவியே பேசினர் என்றும் அக்காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்த தென்றும் மகிழ்ச்சி பொங்க எழுதியிருந்தாய். அந்நிகழ்ச்சி உனக்கும் எனக்கும் மகிழ்ச்சி தருவதோடன்றி நாட்டு மக்களில் நன்மனம் படைத்தோர் அனைவர்க்குமே மகிழ்ச்சி தரக்கூடியதுதான். தமிழகத்துக்கும் நல்ல காலம் தோன்றிவிட்டது என்று எண்ணத்தோன்றுகிறது. ஒவ்வொரு வரும் தத்தம் திறமை களைக் காட்ட வேண்டு மென்றோ கட்சிக் கொள்கைகளை நிலை நாட்டிவிட வேண்டுமென்றோ அவையில் கைதட்டல் வாங்க வேண்டுமென்றோ கருதாராய், மொழி முன்னேற்றம், நாட்டு நலம், இன ஒற்றுமை இவற்றை அடிப்படையாக வைத்துக் குறள் நெறி பரவவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மனத்தில் உண்மையாக நிலை நிறுத்திப் பாடுபட வருவோர் எவருமே ஒன்றுபடத்தான் செய்வர். அவ்வாறு ஒன்றுபட்டுத் தொண்டு செய்வதுதான் அறிவுடை மையுமாகும். தன்னலம் தலை தூக்கிவிடின் பொதுநலங் கெட்டொழியும். நம் தலைவர்களிடையே தொண்டர் களிடையே அரும்பி வரும் இப்பொதுநல மனப்பான்மை - பொது நன்மைக்காகச் சிறுசிறு கருத்து வேறுபாடுகளை விட்டொழித்து ஒன்றுபட்டு வரும் உளப்பாங்கு வளர்ந்து, விரிந்து, பரந்து பயன் தருவதாக. |