பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்7

நுழையும் போதோ அரசியற்றுறை போன்ற வேறு துறைகளில் இறங்கும் போதோ கட்டாயம் உயர்வு பெறுவாய். வெற்றி பெறுவாய் கட்டுப்பாட்டால் நன்மையுண்டு என்பதற்கு எடுத்துக் காட்டு காந்தியடிகள் ஒருவர் போதாதா?

அடக்கமும் அவ்வாறுதான். அடக்கமுள்ளவன் உயர்வான், அடக்கமில்லாதவன் தாழ்வான் என்ற கருத்தை, ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்று மிக அழகாகக் கூறியிருக்கிறார் வள்ளுவர். இக்குறள் எப்பொழுதும் உன் உள்ளத்தே ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் சொற் களுக்கு அடங்கி நட. ஆசிரியரிடம் பணிந்து பேசு. என்னை எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே உன் ஆசிரியரையும் எண்ணு. ஆசிரியருக்குப் பணிந்து நடக்கப் பழகாவிட்டால் நீ நாளை யாருக்குப் பணிந்து நடக்கப் போகிறாய்? பணிவு தாழ்வு தரும் என்று எண்ணி விடாதே என்றும் உயர்வே தரும்.

பணிந்து நடக்க வேண்டுமென்று எண்ணித் தாழ்வு மனப் பான்மையுடையவனாக - அடிமையுள்ளமுடைய வனாகப் பழகி விடாதே. பணிவு வேறு, தாழ்வு மனம் வேறு, பெருமிதவுணர் வுடைய வனாக இரு. பெருமிதமாக இருக்க வேண்டுமென்று செருக்குடைய வனாக மாறி விடாதே. பெருமிதம் வேறு. செருக்கு வேறு, இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்து நட. இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்து நட. ஒவ்வொன்றுக்கும் உள்ள வேறுபாடுகளை உணராமல் நிரம்பப் பேர் கெட்டு விட்டார்கள். அந்தக் கேட்டுக்கு நீயுங் இடங் கொடுத்து விடாதே.

சரி, கடிதம் நீண்டு விட்டதென்று எண்ணுகிறேன். ஒவ்வொன் றாகச் சொன்னால்தானே நீயும் கடைப்பிடித்து ஒழுக முடியும். ஆகவே நிறுத்துகிறேன்.

11.7.1956

உன் தந்தை
முடியரசன்

