அவ்வாறு எண்ணிக் கொள்வதில் குற்றமொன்றில்லை. மற்றவரைத் தாழ்த்தியும் புறங்கூறியும் வருகின்றனராம். கேடு பயக்கும் வழிகள் என்னென்ன உள்ளனவோ அவற்றை யெல்லாம் கையாள்கின்றனராம். தமக்கு வேண்டிய மாணவர், அவர்க்கு வேண்டிய மாணவர் என்றெல்லாம் பிரித்துணர் கின்றனராம். அதனோடு நின்றாரல்லர். அதனடியாக நன்மை தீமைகளும் இயற்று கின்றனராம். இத்தகு கீழ்மைக்குணம் ஆசிரிய உலகில் புகுவது, வருந்தத் தக்கதோடன்றி வெறுக்கத் தக்கதும் ஆகும். என் செய்வது? எவ்வளவு கற்பினும் பண் பாடில்லையே! பண்பட்ட கல்வி என்று வருமோ? ஆசிரியர் இவ்வாறிருந்தால் இவர்பாற் பயிலும் மாணவரி டையே நற்பண்புகள் எங்கே வளரமுடியும்? ஆசிரியத் தொழில் 'புனித' மானது என்று நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அது நிற்க; நீ எந்த ஆசிரியரை விரும்புகிறாயோ அது மற்ற ஆசிரியருக்குத் தெரிதல் வேண்டா. உண்ணும் நேரத்தில் உண். உறங்கும் நேரத்தில் உறங்கு. விளையாடும் நேரத்தில் விளையாடு. மாறி எதையும் செய்யாதே. உடல் நலத்தை நன்கு பேணிக் கொள். நாட்டுள் ஒருவர் நாம்; நம்மால் தான் நாடு என்ற எண்ணம் எப்பொழுதும் நெஞ்சில் இருக்கட்டும். ஒவ்வொருவருடைய கல்வியும் பண்புந்தாம் நாட்டை உயர்த்து கின்றன. 1.8.1956 உன் தந்தை முடியரசன் |