பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்101

பாறை நிலத்திலே மரம் தளிர்த்து வளர முடியுமா? மென்மையான நிலத்திலே தான் அது தளிர்த்துச் செழித்து வளரமுடியும். அதைப் போலவே வாழ்க்கையும், அன்பு என்ற மென்மையிலேதான் வளர்ந்து சிறக்கும். அன்பற்ற, வறண்ட வன்னிலத்தே அது வளராது; சிறக்காது, காய்ந்து, உலர்ந்து வாடிவிடும்.

ஒருவனுக்கு நடக்கக் கால்கள் வேண்டும்; காணக் கண்கள் வேண்டும்; கேட்கச் செவிகள் வேண்டும்; பேச வாய் வேண்டும். இவ்வுறுப்புகள் எல்லாம் செவ்வனே அமையப் பெற்றாலும், அகத்துறுப்பாகிய அன்பும் பெற்றிருந்தாற்றான், அவற்றாற் பயனுண்டு. அகத்துறுப்பு, புறத்துறுப்பு என்னும் இரண்டனுள், அகத்துறுப் பாகிய அன்பு இல்லையானால் புறத்துறுப்புகள் எத்துணைச் சிறப்புற்றிருந்தாலும் அவற்றால் யாது பயன்? ஏனையவுறுப்புகள் ஒன்றிரண்டு குறைவு படினும் குற்றமில்லை;அன்பு பெற்றவனாக விளங்கினால் அவன், முழுமை பெற்றவனாகவே கருதப்படுவான். அன்பில்லான் குறையா வுறுப்பினனாயினும், குறைவுடையானாகவே உலகின ரால் எண்ணப்படுவான். ஆதலின், நீ முழுமை பெற்ற வனாக விளங்க, உன் வாழ்வு சிறந்து செழித்து வளர, சமுதாயத்திற் கூடி வாழ, தன்னல மற்றுப் பொதுநலம் பேண அன்புடையவனாக வாழ வேண்டும்.

"அன்பின் வழிய துயிர்நிலை; அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு",

இங்ஙனம்,
அறிவுடை நம்பி.

