பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்103

அவனுடைய கை தன்னியல்பிலே சென்றுதவி, அவ்விளிவரலை நீக்கிக் காக்கின்றது. அதுபோலவே ஒருவன் துன்புற்றகாலை, அவன் வேண்டா முன்னரே தன்னியல்பால் விரைந்து சென்றுதவி செய்து, அத்துன்பத்தை நீக்கிக் காத்தல் செய்கிறது நட்பு. மேலும் தன் மனைவி, மக்கள், உறவினர் என்னும் இவரிடத்துச் சொல்ல முடியாத செயல்களை, மனநிலையை, தன் மனத்துள் உறுத்திக் கொண்டேயிருக்கும் சில எண்ணங்களை வெளிப்படுத்திக் காட்டி, வேண்டிய வழி வகைகளைத் தெரிந்து கொள்வதற்கு உற்ற துணை யாக இருப்பது நட்பு. ஒருவன் அறிந்தோ அறியாமலோ தவறு செய்த வழி, அவனை இடித்துரைத்து, நல்வழியில் நடக்குமாறு செய்யவல்ல வழிகாட்டி நட்பு. இவ்வாறு பல சிறப்புகளை யுடையது நட்பு.

காணும்பொழுது முகம் மலர்ந்து, நகைத்துப் பேசுவது மட்டும் உண்மை நட்பாகாது. அகமும் மலர்ந்து, முகமும் மலர்ந்து, அன்பு காட்டுவதே உண்மையான நட்பாகும். பயன்கருதிப பழகுவது பொய்ந் நட்பு. பயன் கருதாது, துன்பங் கண்டபொழுது துடைக்க முந்துவதே உண்மை நட்பு. பிறைமதி நாளும் நாளும் வளர்வது போல வளர்ந்து கொண்டேயிருப்பது மெய்ந் நட்பு. நிறைமதி நாடோறும் தேய்வது போலக் குறைந்து வரும் நட்புப் பொய்ந் நட்பு. கரும்பை நுனியிலிருந்து தின்று கொண்டே வந்தால், சுவை ஏறிக்கொண்டே செல்லும்; அடியிலிருந்து தின்றால், சுவை இறங்கிக் கொண்டே வரும். அதுபோல உண்மை நட்பு ஏறிக் கொண்டே செல்லும். போலி நட்பு, இறங்கிக் கொண்டே வரும்.

உண்மை நட்பிற்கு, ஒரே தேயத்தவராக இருக்க வேண்டு மென்பதில்லை; பல முறை கண்டும், பேசியும் பழகவேண்டு மென்பதில்லை. ஒன்றுபட்ட வுணர்ச்சியே உண்மை நட்பினைத் தர வல்லது. புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என்னும் மூன்றும் நட்பிற்குக் காரணங்களாக இருப்பினும், ஒன்றுபட்ட உணர்ச்சியே மிகச் சிறந்ததாக மேலோர் கருதுவர். 'நெடுந் தொலைவில் உள்ளவர் களையும் உணர்ச்சியானது நெருங்கச் செய்து விடுகிறது' என்று, மாக்சிம் கார்க்கி என்னும் உருசிய நாட்டு எழுத்தாளன் கூறியுள்ளதை இங்கே எழுதுவது நல்லதென்று கருதுகிறேன்.

உயர்ந்த நட்பை ஆக்குவது உணர்ச்சிதான் என்பதற்கு, நம் நாட்டு வரலாறே போதுமானது. கோப்பெருஞ்சோழன் சோழ