பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்105

ஆனால், அவ்வளைவு அம்பைப் பாய்ச்சுவதற்காகத் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தொழுதுவரும் கையத்தே பழுது தரும் படைக்கலமும் மறைந்திருக்கும்; அழுது வருங் கண்ணீருள் அழிவு தரும் வஞ்சகமும் கலந்திருக்கும். ஆதலின் வெளித் தோற்றத் தைக் கொண்டே ஒரு முடிபுக்கு வருதல் கூடாது.

நல்லவரை ஆராய்ந்தறிந்து, அவருடன் தொடர்பு கொண்ட பிறகு, எப்பொழுதேனும் அவர், வெறுக்கத்தக்க செயல்களைச் செய்துவிடின், அவரை வெறுத்தொதுக்குதல் கூடாது. அன்பின்மை யாற் செய்தனர் என்று எண்ணுதல் தவறு; அறியாது செய்தனர் அல்லது மிக்க வுரிமையாற் செய்தனர் என்று கருதிப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒருவர் பொறை, இருவர் நட்புக்கு ஏதுவாகும். நெல்லுக்கும் உமியுண்டு; உமியிருப்பதால் நெல்லை வெறுத்து விடுவதில்லை. கண்ணில், கை விரல் பட்டு விடுவதால் அவ்விரலை வெட்டி விடுவதும் இல்லை. அவ்வாறு கருதிப் பழகுதல் வேண்டும். அளவுக்கு மீறிய குறைகள் காணப்படின் அவரைத் தூற்றித் திரியாமல், தூர விலகிவிடவேண்டும். ஆதலின் நீ நட்பின் அருமை பெருமைகளை அறிந்து, உண்மை நட்பின் இயல்பை உணர்ந்து, போலி நட்பின் இயல்பைப் புரிந்து, வேண்டும் நட்பை விரும்பி, வேண்டா நட்பை விலக்கி, நல்வாழ்வு வாழ் வாயாக.

"செயற்கரிய யாவுள நட்பின்! அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு."

இங்ஙனம்
அறிவுடை நம்பி.

