பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்107

ஒளியுண்டாயின் வாக்கினிலும் ஒளியுண்டாகும் அல்லவா? ஒளியும் அதனால் வலிவும் பெற்ற வாக்கினால் உலகத்தையே தன்வய மாக்கும் பேராற்றலைப் பெற்று விளங்கினார். உண்மையைத் துணையாகக் கொண்டமையால், பேரரசை எதிர்த்துப் பேசும் திண்மையையும், போராடி விடுதலை பெறத் தக்க ஆண்மை யையும் உடையவராகித் திகழ முடிந்தது. உண்மை என்னுங் கருவிக்குமுன், அஞ்சத்தக்க படைக்கலங்கள் தூள்தூளாகின. உண்மைக்கு அத்தகைய ஆற்றலுண்டு.

அஞ்சா நெஞ்சமும் ஆண்மையுந் தரத் தக்க உண்மையை வீரமும் வெற்றியுந் தரவல்ல உண்மையை நீயுங் கொண்டிலங்க வேண்டும். உண்மைக்கு வாய்மை, மெய்ம்மை என வேறு பெயர் களும் உண்டு. இம்மூன்று சொற்களும் பொதுவாக ஒரே பொருளைத் தருவனவேனும், அவற்றிற்குச் சிறப்புப் பொருளும் உண்டு. உள்ளத்தாற் பொய்யாதொழுகுவது உண்மை; வாயாற் பொய்யா தொழுகுவது வாய்மை; மெய்யால் (செயலால்) பொய்யா தொழுகுவது மெய்ம்மை. மனம், சொல், செயல் மூன்றாலும் பொய்யாதொழுக வேண்டுமென்பது கருத்து. இச்சொற்கள் உணர்த்துந் தமிழ்ப் பண்பாட்டை நினையுந் தொறும் நெஞ்சம் மகிழ்கிறது. இம் மூவகையாலும் நீ தூயவனாக வாழவேண்டுமென்ற ஆர்வத்தால் இப்பொருளை விளக்கி எழுதினேன்.

வாய்மை, அல்லது உண்மை என்றால் என்ன? என்பதை முதலிற் புரிந்துகொள்ள வேண்டும். கண்டதைக் கண்டவாறே சொல்லுதல், நிகழ்ந்ததை நிகழ்ந்தபடியே சொல்லுதல் வாய்மை என்று கருதிக் கொண்டிருப்பாய். அஃது ஓரளவுக்கு உண்மை யாயினும், நம் தமிழ் மறையாகிய வள்ளுவம் வாய்மைக்குத் தனியிலக்கணம் வகுத்துப் புது விளக்கந் தருகிறது. 'மற்ற வுயிர்க்குச் சிறிதுந் தீங்கு பயவாத சொற்களைச் சொல்லுதலே வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படும்' என்பது வள்ளுவர் வகுத்த வழி. அது கண்டதற்கு மாறாக இருந்தாலும் நிகழ்ந்ததற்கு வேறாக இருந்தாலும், சிறிது கூடத் தீமை பயவாத சொல்லாக இருக்குமானால் அஃதொன்றே வாய்மை எனப்படும். கண்டதாக இருந்தும், நிகழ்ந்ததாக இருந்தும், ஒரு சிறு தீமையேனும் தருமானால் அது பொய்ம்மைதான் என்பது பெறப்படுகிறது.