பக்கம் எண் :

108கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

கண்டதற்கும் நிகழ்ந்ததற்கும் மாறாக உரைப்பது பொய்ம்மை யன்றோ? என வினவலாம். அது பொய்ம்மை அன்று; வாய்ம்மையின் பாற் பட்டதாகவே கொள்ளத் தக்கதாகும். ஆனால், அச்சொல் நன்மை பயப்பதாக - புரை தீர்ந்த நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது வாய்மையின்பாற்படும்; நன்மை பயவாதாயின் பொய்ம்மை தான். நமக்கு நன்மை பயப்பதற் காகப் பொய்ம்மை கூறின், அது வாய்மையின் பாலதன்று. பிறர்க்கு நன்மை பயப்பதாகவே இருக்கவேண்டும். ஒருவன் பெருங் கேட்டி லோ சாக்காட்டிலோ சிக்கிக் கொள்ளும் சூழ்நிலையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள். அதனினின்று நீக்கி, இன்புறும் நிலையைத் தருமானால், அப்பொய்ம்மையும் வாய்மையிடத்ததுதான். இவனைக் காப்பதற்காக உரைப்பது, மற்றையோர்க்குத் தீங்கு பயப்பதாக இருந்துவிடக்கூடாது. அதனாற்றான் புரைதீர்ந்த நன்மை எனப் பட்டது. சுருங்கக் கூறின், நிகழ்ந்தது கூறுங்கால் தீங்கு பயக்குமாயின் பொய்ம்மை; தீங்கு பயவாவிடின் மெய்ம்மை. நிகழாதது கூறுங்கால் நன்மை பயக்குமாயின் மெய்ம்மை; நன்மை பயவாவிடின் பொய்ம்மை என்க.

பிறர் அறிந்திலர் என்று, நெஞ்சறிந்த ஒன்றை எப்பொழுதுமே பொய்த்தல் கூடாது. பொய்த்தால் அஃது, என்றும் உள்ளிருந்து சுட்டுக்கொண்டேயிருக்கும்; உறுத்தியுறுத்தித் துன்பத்தை உண் டாக்கிக் கொண்டேயிருக்கும். மனச்சான்றை மறைத்து விட முடியாது. நெஞ்சையொளித்தொரு வஞ்சகம் இல்லை யல்லவா? தானஞ் செய்வாரும் தவஞ் செய்வாரும் மிகச் சிறந்தவர் என்பர். அவரினும் தலையாய சிறப்புக் குரியவர் வாய்மையாளர். அவர் மொழியும் வாய்மை, மனத்தொடு பொருந்திவர வேண்டும். அப்பொழுதுதான் அதற்குச் சிறப்பு; பொருந்தாவிடின் அவ்வாய்மை யால் எவ்வகைப் பயனும் இல்லையாகிவிடும்.

முதற்கடிதத்தில் அறஞ்செய்யவிரும்பென எழுதியிருந்தேன். ஏனைய அறங்களைச் செய்யாவிடினுங் குற்றமில்லை; பொய்யாமை என்னும் அறத்தைச் செவ்வனே கடைப்பிடித் தொழுகினாலே போதும். பொய்யாமையில் வழுவாது நின்றொழுகினால் ஏனைய அறங்கள் தாமே வந்தெய்தும். இப்பிறவியில் உயர்ந்த புகழெய்த விரும்பும் ஒருவன் பொய்யாமை என்னும் ஓரறத்தைத் துணையாகக் கொள்ள வேண்டும். புகழெய்த இதனினுஞ் சிறந்த துணை வேறொன் றில்லை.