பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்109

உடலின் புறத்தே படிந்துள்ள மாசு நீங்கவும், உடல் தூய்மை பெறவும் நாடோறும் நீராடுகின்றோம். புறத்தைத் தூய்மை செய்ய நீர் காரணமாகிறது. அதுபோல, அகத்தைத் தூய்மை செய்ய, அகத்திற்படிந்துள்ள மாசுகள் நீங்க வாய்மையே காரணமாகிறது. வாய்மை, மனமாசுகளைத் துடைத்துவிடுவதால் மெய்யுணர்வு துலங்குகிறது. மெய் யுணர்வைப் புலப்படச் செய்வதாற்றான், அவ் வாய்மையைப் பொய்யா விளக்கென்று வள்ளுவர் கூறுகின்றார். ஏனைய விளக்குகளெல்லாம் புறத்திருளைப் போக்குவன. வாய்மை என்னும் விளக்கு, மனத்திருளை நீக்குவது.

மனத்திருளை நீக்கி, மெய்யுணர்வைப் புலப்படுத்த வல்ல பொய்யா விளக்காகிய வாய்மையைச் சிறப்பித்துக் கூறவந்த திருவள்ளுவர், "மெய்ந் நூல்களாக யாம் கண்ட நூல்களுள், வாய்மையைவிடச் சிறந்தனவாகக் கூறப்பட்ட பிற அறங்கள் இல்லை" எனத் துணிந்து, அறுதியிட்டுக் கூறுகின்றார். இத்தலை சிறந்த அறத்தைக் கைக்கொண்ட நம் சான்றோர், 'பழியெனில் உலகுடன் பெறினுங்' கொள்ளாதவராகி வாழ்ந்தனர். அவர் வழிவந்த நாமும், இவ்வையகம் முழுவதும் பெறுவதாயினும் பொய்ம்மொழி கூறாது வாழ வேண்டும். உண்மை கூறுவதால் எத்தகைய துன்பம் வரினும் மனத்துணிவுடன் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அப்பொழுது நிலைத்த வெற்றியை நாம் அடைய முடியும். பொய்யன் என்றிருந்தால், உலகம் ஒருபொழுதும் நம்பாது, சமுதாயத்தில் நன் மதிப்புங் கிட்டாது. பழியும் இழிவும் பற்றிக் கொள்ளும். மீளாத் துயரில் வீழ்ந்து, பாழாம் நிலையை அடைய நேரிடும். ஆதலின், கனவினும் பொய்ம்மையைக் கருதாதே. உண்மை விரும்பு. அதையே விளம்பு.

'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு".

இங்ஙனம்
அறிவுடைநம்பி.

