110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
5 ஒப்புரவொழுகு அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. வாய்மையாளன் என்ற காரணத்தால் உன்னை உன் ஆசிரியர்களும் மாணவ நண்பர் களும் மிகுதியும் விரும்புகின்றனர் என்றெழுதியிருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி! உன்னைப் படிக்க வைப்பதும், உனக்கு அடிக்கடி இத்தகைய நல்லுரைகள் எழுதுவதும் எதற்காக? உன் நல்வாழ்வுக்காகத்தான்; படித்துப் பட்டம் பெற்று, நல்ல நிலையில் இருந்து, கவலையின்றி, இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காகத்தான். வளமாக வாழ வேண்டும், நல்ல மனிதன் என்ற புகழோடு வாழ வேண்டும் என்னும் ஆசைதான் அவ்வாறெழுதத் தூண்டுகிறது. ஆனால், அந்த வாழ்வு, உனக்காக - உன் குடும்பத்திற்காக என்ற அளவுடன் நின்று விடுதல் கூடாது. அதனைச் சிறந்த வாழ்வென்று நான் கருதமாட்டேன். பிறருக்காகவும் பயன்படும் வாழ்வுதான் சிறந்தது; உயர்ந்தது. ஒவ்வொருவருக்கும் இவ்வெண்ணம் சிறிதேனும் வேண்டும். இவ்வாறு வாழும் வாழ்விற் பெறுமின்பந் தனித்த சிறப்புடையது. நீயும் அவ்வுள்ளத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தில் சில கருத்துகளை இக்கடிதத்தில் எழுது கின்றேன். பழங்கால மனிதன் காடுகளிலும், மரக்கிளைகளிலும், மலைக் குகைகளிலும் தனித்து வாழ்ந்தான். அப்பொழுது தனக்கென்று வாழுந் தன்மையுடையவனாக வாழ்ந்தான். பிறகு காலஞ் செல்லச் செல்ல, அறிவு வளர வளரக் கூடி வாழக் கற்றுக் கொண்டான். கூடி வாழக் கற்றுக் கொண்ட மனிதன், தனக்கென்று வாழாது, பிறர்க்கும் உரியவனாக வாழத் தலைப்பட்டான். தனியே வாழ்ந்த அவன், காலப்போக்கில் சமுதாய வாழ்வை உருவாக்கிக் கொண்டான். அச்சமுதாய வாழ்வில் ஒருவருக்கொருவர் உதவி செய்து, கலந்து, நெருங்கிப் பழகலாயினர். அன்று முதல் ஒவ்வொரு மனிதனும் |