பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்115

6
ஒழுக்கம் கைக்கொள்

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் கிடைத்தது. பிற துறையில் எவ்வளவு தான் மேம்பாடுற்றிருப்பினும், அவற்றையெல்லாம் உயர்த்திக் காட்டும் ஒழுக்கத்தைப் பற்றி இக்கடிதத்தில் எழுதுகிறேன்.

ஒருவன் பல நூல்களைக் கற்றிருப்பினும், பல பட்டங் களைப் பெற்றிருப்பினும் உயர்ந்தோர் ஒழுகிய நெறிகளைக் கல்லாதவனாக இருப்பின் அவன் அறிவில்லாத வனாகவே கருதப்படுவான். கல்வியின் பயன் அறிவாகும்; அறிவின் பயன் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கம் இல்லையாயின் அறிவில்லை; அறிவில்லை யாயின் கல்வியில்லை. ஆதலின் அவன், அறிவிலி யாகவே கருதப் படுவான். ஒழுக்க நெறிகளைக் கற்றலாவது, அவற்றை இடை விடாது பழக்கத்திற் கொணர்தலாகும். அறநூல்கள் கூறும் நெறி களிலும் சான்றோர் ஒழுகிய நெறி களிலும் இக்காலத்திற்குப் பொருந்தாதனவற்றை நீக்கிப் புதிய நெறிகளிற் பொருந்துவன கொண்டு நடத்தலே ஒழுக்கம் எனப்படும்.

ஒழுக்கமுடையவன் எல்லாச் சிறப்புகளையும் அடைகிறான். அஃதில்லான் தாழ்நிலையை எய்துகிறான்.ஆதலால் சிறப்புகளைத் தரவல்ல ஒழுக்கத்தை, உயிரினும் மேலாக மதித்துப் போற்ற வேண்டும். எல்லாப் பொருள்களையும் விட உயிர் சிறந்ததுதான். ஆயினும் உயிர் ஒருவனுக்குச் சிறப்புத் தருவதில்லை. அஃறிணைப் பொருள்களிடத்தும் உயிர் இருக்கத்தான் செய்கிறது.

இரு திணைக்கும் பொதுவாகவுள்ளது உயிர். அதனால் ஒரு திணைக்கும் தனிச் சிறப்பு விளைவதில்லை. ஆனால், ஒழுக்கம் தனிச் சிறப்பைத் தருகிறது. அவ்வொழுக்கமே அவனை உயர்திணை யாக்குகிறது. அதனால் சிறப்புத் தராத உயிரை விடச் சிறப்பைத்