பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

தரும் ஒழுக்கமே உயர்ந்ததாகிறது. ஆதலின் ஒழுக்கத்தினை உயிரினுஞ் சிறந்ததாகக் கருதி, எவ்வகையாலுஞ் சிதையாமற் பேணி, முயன்று காக்க வேண்டும்.

மனிதர்க்குள் உயர்வு, தாழ்வு பேசுகிறோமல்லவா? எதனை அடிப்படையாக வைத்துப் பாகுபாடு செய்கின்றோம்? பிறப்பை யோ, செல்வத்தையோ அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு செய்திருக்கின்றோம். ஆனால், வள்ளுவம் ஒழுக்கத்தைக் கொண்டே உயர்வு தாழ்வு என்னும் பாகுபாட்டை விதிக்கின்றது. ஒழுக்க முடையவன் எவனோ அவன் உயர்குடிக் குரியவன். ஒழுக்கந் தவறியவன் எவனோ அவன் தாழ்ந்த குடிக்குரியவன். தன்னை உயர்த்து நிறுத்துவானும் தன்னைத் தாழ்த்திங் கீழாக்குவானும் அவனேயாகின்றான். பிறப்பு, மனிதன் உயர்வுக்குந் தாழ்வுக்குங் காரணமன்று.

ஒருவன் கற்ற கல்வியை மறந்துவிடுவானாயின் அஃது அவன் குலத்தைக் கெடுத்துவிடாது. ஒழுக்கத்தை மறந்து விட்டால், அது குலத்தையே கெடுத்துவிடும். நம் வாழ்நாளி லேயே பலரைக் கண்டிருக்கிறோம். செல்வத்தாலும், பிறப்பாலும் உயர்ந்தவராகக் கருதப்பட்டவர்கள், ஓழுக்கக் கேட்டால் தாழ்நிலையடைந்து, மதிப்பிழந்து, செல்லாக் காசுகளாக ஒதுக்கப்பட்டதைக் கண்டிருக் கிறோம். அதனால் கற்ற கல்வியை மறந்தாலும் மறக்கலாம்; பெற்ற ஒழுக்கத்தை மறத்தல் கூடாது; அதனைப் பேணிக் காக்க வேண்டும். ஒழுக்கக் கேடர்கள் உயர்வு பெறாததோடு, தாழ்வையும் அடைந்து விடுவர். இதனையஞ்சியே, சான்றோர் ஒழுக்கத்திற் குறையாமல் நிற்கின்றனர்.

ஒழுக்கக் கேட்டால் பலவகைத் தீமைகளும் சார்ந்து விடுகின்றன. அடாப் பழிகளையும் அடைய நேரிடுகிறது. ஒழுக்கங் குன்றிய வர்க்கு நண்பர்கள் உண்டாதல் அரிது; மாறாகப் பகைமையே வளர்ந்தோங்கும். அப்பகைமை காரணமாகத் தகாத பழியை அவர்மேற் சுமத்தலுங் கூடும். அதனை ஆய்ந்து பாராமல் உலகமும் நம்பிவிடும். ஒழுக்கமின்மை காரணமாக எய்தாப் பழியும் எய்த வேண்டி வரும். இங்கே ஒரு குறட்பாவைக் கூற விரும்புகின்றேன்.

"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்"