பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்117

நல்லொழுக்கமானது, அறத்திற்குக் காரணமாகி நின்று, இன்பத்தைத் தரும்; தீயொழுக்கம் மறத்திற்குக் காரணமாகித் துன்பந்தரும் என்பது இக்குறளின் கருத்தாகும். நல்லொழுக்கத்தை அறத்திற்கு வித்து என மொழிந்தவர், தீயொழுக்கத்தை மறத்திற்கு வித்தென்று கூறாது, 'இடும்பை தரும்' என்று மட்டுங் கூறிச் சென்றதைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். நிலத்தில் ஊன்றிய வித்து, உடனே கனி பயந்து விடுவதில்லை. அது முளைவிட்டுச் செடியாகி, மரமாகிப் பூத்துக் காய்த்துப் பின்னரே கனி தருகிறது. அதுபோலவே நல்லொழுக்கமும் உடனே இன்பம் பயவாது. காலஞ் செல்லச் செல்லப் பயன் தரும். அதனாற்றான் அதனை 'வித்து' என்று விளம்பினர். தீயொழுக்கம் அவ்வாறன்று. கால நீட்டிப்பு வேண்டுவ தில்லை; உடனே பயன்தந்துவிடும். இதனையுணர்த்தவே தீயொழுக் கத்தை வித்தென்று உருவகஞ் செய்யாது, 'இடும்பை தரும்' என்ற அளவிற் கூறினர். இக்கருத்தை மனத்திற் கொண்டு, உடனே துன்பம் பயக்கும் தீயொழுக்கத்தை விடுத்து, நல்லொழுக்கத் தையே நாடவேண்டும்.

ஒழுக்கம் என்றால் என்னவென்று முதலிற் புரிந்து கொள்ள வேண்டும். அறநூல்கள் விதித்தனவற்றைச் செய்தலும், விலக்கின வற்றை விடுத்தலும் ஒழுக்கமாகும். செய்ய வேண்டுவனவற்றைக் கூறுதல் விதித்தல். செய்யத் தகாதன வற்றைக் கூறுதல் விலக்கல். பிறர்க்குத் தீங்கு தரும் பொய் முதலிய தீச்சொற்களை மறந்தேனும் சொல்லுதல் கூடாது; பிறர் பெற்ற ஆக்கங் கண்டு பொறாமை கொள்ளுதல் தகாது; பிறர்க்குரிய பொருளைக் கவரக் கருதுதல் பெருங்குற்றமாகும்; புறங் கூறுதலும் பயனில சொல்லுதலும் வெறுக்கத்தக்கன. இவை போல்வன விலக்கலின்பாற்படும். ஆதலின் இத் தீயனவற்றை நீக்கியொழுக வேண்டும்.

அன்புடையவனாக இரு, உண்மை பேசு, இகழ்வாரைப் பொறுத்துக் கொள், இனியன கூறு, ஈதல் இன்பம் பயக்கும் என இவ்வாறு சொல்லுதல் விதித்தலின்பாற்படும். ஆதலின் இன்னோ ரன்ன நன்மைகளைக் கடைப்பிடித்தொழுக வேண்டும். பின்பற்றி நடக்க வேண்டிய ஒழுக்கங்கள் எவை எவையென்று முழுமையுங் கூறிவிட இயலாது. ஓரளவே எடுத்தெழுதவியலும். நீயே சிந்தித்துச் சிந்தித்துக் காலத்துக்கேற்பக் கொள்ளுவன கொண்டொழுக வேண்டும்.; தள்ளுவன தள்ளி நடக்க வேண்டும். எனினும் ஓரிரு நல்லொழுக்கங்களைப் பற்றி எழுதுகிறேன்.