7 ஓதுவதொழியேல் அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. கல்வியின் சிறப்பை யெல்லாம் உனக்குப் பல முறையும் நேரில் சொல்லியிருக்கிறேன். ஆயினும் கல்வி பயில்வதற்குக் கால எல்லை எது என்பதைப் பற்றி உனக்குக் கூறியதில்லை என்று கருதுகிறேன். அதனால் கற்க வேண்டிய கால எல்லை பற்றியும் அதனோடு பிற கருத்துகளையும் இப்பொழுது எழுதுகிறேன். இதனைப் பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணம் உன் கடிதத்தைப் படித்த பிறகுதான் தோன்றியது. 'சில ஆண்டுகளில் படிப்பு முடிந்து விடும். அதன் பிறகு ஏதேனும் ஒரு வேலையில் அமர்ந்து நம் குடும்பத்திற்கு உதவியாக இருப்பேன்' என எழுதி யுள்ளாய். குடும்பப் பொறுப்புணர்ச்சி இப்பருவத்திலேயே உன்னிடங் காணப்படுவது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், 'படிப்பு முடிந்து விடும்' என்று நீ எழுதியிருப்பதுதான் சரியில்லை. அதனால் அதைப் பற்றி உனக்கெழுதுகிறேன். உலகில், மனிதன் அடையத்தக்க பேறுகள் பல. அப்பேறுகள் அனைத்தும், செல்வம் என்று சான்றோரால் அழைக்கப்படுவதும் உண்டு. அவற்றுட் கல்வியும் ஒன்றாகும். எல்லாச் செல்வங்களும் வேண்டப்படுவனவேனும் அவற்றுட் கல்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வம் என்று கருதப்படுகிறது. கல்வியைப் பற்றிக் கூறவந்த வள்ளுவர் 'கேடில் விழுச்செல்வம்' என்று குறிப்பிடுகிறார். மணி, பொன் முதலிய ஏனைய பொருட் செல்வங்கள் செல்வமல்ல என்றுங் கூறுகிறார். கல்வி, கேடில்லாத செல்வம், சீரிய செல்வம் எனக் கூறியதன் காரணத்தை நீ நன்கு புரிந்துகொள்ளுதல் வேண்டும். மணி, பொன் முதலான செல்வங்கள் தாயத்தாரால் பங்கிட்டுக் கொள்ளப்படும்; கள்வராற் கவரப்படும்; அரசு சீறின் அரசால் பறித்துக் கொள்ளப்படும். வெள்ளத்தால் அழிக்கப்படும்; |