120 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
வெந்தணலால் எரிக்கப்படும். கல்விச் செல்வம், பங்கிட்டுக் கொள்ளவோ, அழிக்கவோ எரிக்கவோ முடியாதது. பொருட் செல்வங் கொடுக்கக் கொடுக்கக் குறையுந்தன்மையது; கல்விச் செல்வங் கொடுக்கக் கொடுக்க வளருந்தன்மையது. பொருட் செல்வம் பிறரிடம் மாறிச்செல்லும் இயல்பினது; கல்விச் செல்வம் மாறாது நிற்கும் இயல்பினது. அதனால் அக்கல்விச் செல்வம், கேடில் செல்வம் என்றும் விழுச்செல்வம் என்றுஞ் சிறப்பித்துக் கூறப்படுகிறது. அழிவில்லாத அச் செல்வத்தை - சீரிய அச்செல்வத்தை அரிதின் முயன்று தேடிப் பெறவேண்டியது உன் கடமை யல்லவா? உற்றுழியுதவியும், உறுபொருள் கொடுத்தும் வழிபாட்டு நிலையை வெறுக்காது நின்றும் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டிலும் நாட்டிலும் நன்மதிப்பைத் தேடித் தருவது கல்வி; சமுதாயத்தில் நெளியும் உயர்வு தாழ்வுகளை யகற்றிச் சமனிலையை யுருவாக்கித் தருவது கல்வி; அரசியலிலும் நல்ல செல்வாக்கைப் பெற்றுத் தருவது கல்வி. சுருங்கக் கூறின், மனிதனை மேம்பாட்டையச் செய்யும் மாண்புடையது கல்வியெனலாம். கற்றவன் ஒருவனே கண்ணுடையவன்; கல்லாதவன் குருடனேயாவான். புறத்தே விளங்கும் பொருள்களைக் காண, உடலுக்கு இரண்டு கண்கள் வேண்டும். அதுபோலவே கண்ணுக்குப் புலப்படாத பொருள்களைக் கண்டறிய உயிருக்கும் இரண்டு கண்கள் வேண்டும். எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டுமே உயிருக்கு வேண்டிய இரு கண்கள். இவை ஞானக்கண் அல்லது அறிவுக்கண் எனப்படும். வருங்கால நிகழ்ச்சிகளையெல்லாம் மனத்தால் நோக்கியுணர, இவை கருவியாக அமைந்திருப்பதால் இவற்றைக் கண் என்று கூறலாமல்லவா? அதனால் மனக்கண் பெற்றவன்தான் கண் பெற்ற வனாவான்; அதனைப் பெறாதவன், முகத்தில் இரண்டு கண்களைப் பெற்றிருப்பினும் பயனில்லை என்க. கல்வியின் இன்றியமையாமையை நன்குணர்ந்து, கற்க முயலுங் கால் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டியவை கணக்கில்லாதனவாகவுள்ளன. அவற்றைக் கற்க முனையும் மனிதனுக்கு வாழ்நாள் மிகச் சிலவாக அமைந்துள்ளன. அக்குறைந்த நாளிலேனும் கற்றுக்கொள்ளலாம் என எண்ணினால், |