பக்கம் எண் :

122கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

பால் மாணவர்கள் நடந்துகொள்ளும் முறை, எனக்குப் பெரிதும் மனவேதனை தருவதாகவே இருக்கிறது. எழுத்தறிவித்தவனை இறைவன் என்று சான்றோர் கூறுவர்; தந்தைக்குச் சமமானவன் எனவுங் கூறுவர். இறைவனெனப் போற்றாவிடினும் தந்தை நிலையிலாவது வைத்து மதிக்க வேண்டுமல்லவா? தந்தையையுங் கூட இப்பொழுதுள்ள பிள்ளைகள் மதிப்பதில்லையே? என்னதான் உரிமையுணர்வு பெற்றிருப்பினும் எவ்வளவு தான் முன்னேற்றம் அடைந்திருப் பினும் பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளால் நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக விளங்க வியலாது. அதனால் பெற்றோரை, பெரியோரை, அறிவுக் கண்ணைத் திறந்துவிட்ட ஆசிரியரை மதித்து நடக்கவேண்டும். ஆசிரியருக்குப் பணிந்து, அவர் சொல்லை மதித்து நடக்கும் மாணவன், வீட்டுக்கும் நாட்டுக்கும் நலம் பயப்பவனாக விளங்குவான். அவருக்குப் பணிவதால், அவர் சொல்லுக்குக் கட்டுப்படுவதால் உரிமைக்கும் தன்மானத்திற்கும் இழுக்கு நேர்ந்து விடப் போவதில்லை. சித்திரப் பாவையென இருந்து, செவி வாயாக, நெஞ்சுகளனாகப் பாடங் கேட்கும் மனநிலை. ஆசிரியரை மதித்து நடக்கும் மாணவனுக்கே எளிதில் வாய்க்கும். ஆசிரியர்க்குப் படியாதவன், படியாதவனாகத் தான் இருப்பான்.

இதுவரை கல்வியின் சிறப்பை எழுதினேன்; எத்தகைய நூல்களைக் கற்க வேண்டுமென்றெழுதினேன்; கற்க வேண்டிய முறைபற்றி எழுதினேன். இக்கல்வியை எவ்வளவு காலம் பயில்வது? கால வரையறையுண்டா என்பதையும் எழுதி முடிக்கின்றேன். உயர்நிலைப் பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்து முடித்து விட்டால், கல்வி முடிந்து விட்டதென்று பலருங் கருதுகின்றனர். ஏன், நீயும் அவ்வாறுதான் கருதுகிறாய். அது தவறு. கல்விக்குக் கரையேது? கால வரையறைதான் ஏது? கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம். பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலுங்கால் நீ இன்பத்தைக் காண்பதரிது. தேர்வுதான் உன் கண்முன் காட்சி யளித்துக் கொண்டே நிற்கும். வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள, உள்ளத்தை வளப்படுத்திக் கொள்ள, ஒப்பற்ற இன்பம் நுகர விரும்பினால் கல்விக் கூடத்தைவிட்டு வெளியேறிய பிறகும் படிக்க வேண்டும். எப்பொழுதும் படிக்க வேண்டும்; சாந்து ணையும் படிக்க வேணடும்; ஓதாமல் ஒருநாளும் இருத்தல் கூடாது.