பக்கம் எண் :

124கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

8
கேள்வி முயல்

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உனக்கு என் நல்வாழ்த்துகள். உன் கடிதம் கிடைத்தது. 'கல்வியின் சிறப்பையும் அதன் பயனையும் நன்குணர்ந்து கொண்ட மையால் காலமெல்லாம் படிப்பதாக உறுதி எடுத்துக் கொண்டுள் ளேன்' என எழுதியிருக்கிறாய். அவ்வரிகள் எனக்கு மட்டிலா மகிழ்ச்சியைத் தந்தன. உன் அன்னையிடம் படித்துக் காட்டினேன். உன்னையீன்ற பொழுது கண்ட மகிழ்வினும் பெருமகிழ்வு கொண்டனர். 'என் மகன் சொல் தவறாதவன்; சொன்னபடி நடந்து காட்டுவான்' என்று பெருமைப் பட்டுக் கொண்டார். உன் தம்பி, தங்கைக்கும் படித்துக் காட்டி இன்புற்றார். பெற்றோர்க்குப் பிள்ளைகள் செய்யும் உதவி இவ்வளவுதானப்பா. நீ கற்றுத் தேர்ந்து, ஊரார் மெச்ச வாழ்ந்தால் அதைவிட எங்களுக்கு வேறின்பம் எது?

காலமெல்லாங் கற்பதாக உறுதியெடுத்துக் கொண்டுள்ளாய். மகிழ்ச்சிதான். ஆனால், கற்பதனாலே மட்டும் முழுப்புலமை அடைய இயலாது. எவ்வளவு தான் கற்றாலும் கற்றறிந்த நல்லோரு டைய வாய் மொழிகளையும் கேட்டுப் பழக வேண்டும். இரவு பகலாக அரும்பாடு பட்டுக் கற்றறிந்தாலும் நாம் அறியாத ஒன்றை, சிறந்த ஒன்றை மற்றொருவர் அறிந்து வைத்திருப்பார். அதனால் பிறர் சொல்லக் கேட்கும்பொழுது, நாம் அறியாததையும் அறியும் வாய்ப்பு நேரும். நாம் அறிந்ததைவிடச் சிறந்தது - உயர்ந்தது வேறொன்றில்லை என்றெண்ணினால் நமக்கும் கிணற்றுத் தவளைக்கும் வேறுபாடே இல்லை. இக்கிணற்று நீரைவிடச் சிறந்த நீர் எங்குமே இல்லை என்றுதான் அத்தவளையுங் கருதிக் கொள்கிறது. அவ்வாறு நாமும் இருந்து விடுதல் கூடாது.

யாழிசை கேட்கும்பொழுது எத்தகைய இன்பம் பயக்கின்ற தோ, குழலிசை எப்படித் தனிச்சுவை கொடுக்கின்றதோ அப்படியே