பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்125

கேள்விச் செல்வமும் ஒப்பற்ற இன்பந் தருகிறது; அவற்றினும் மேம்பட்ட பேரின்பத்தை - பெருநலத்தைத் தருகிறது. அக்கேள்விச் சுவையை நுகர்ந்து பயன்கொண்டோர் நன்கறிவர் அவ்வின்பத்தின் பெருமையை. கேள்வியைச் செல்வம் என்று குறித்தேன். ஆம்; அதுவும் ஒரு செல்வந்தான். கல்வி எவ்வாறு 'கேடில் விழுச்செல்வம்' எனப் படுகிறதோ அதைப் போலவே இதுவுஞ் செல்வத்துட் செல்வமாகவே கருதப்படும். இன்னுங் கூறப்புகின், செல்வத்து ளெல்லாந் தலையாய செல்வமாகவே கொள்ளப்படும்.

இக்கேள்விச் செல்வத்தால் உண்டாகும் நன்மை அளவிடற் கரியது. நீ பலவுங் கற்கிறாய்; கற்றமையால் அறிவு பெறுகிறாய். உண்மைதான். கற்றுணர்ந்த சான்றோரின் வாய்மொழிகளைக் கேட்குங் காலத்து, நீ முன்பு கல்வியாற் பெற்ற அவ்வறிவு, வலிவும் பொலிவும் பெறுகிறது. கல்வி கற்க வாய்ப்பில்லாதவர்கள், அவ்வாய் மொழிகளைக் கேட்பார் களானால் அவர்க்கு நல்லறிவு உண்டாகிறது. கற்றவர் பெற்ற அறிவுக்கு உரத்தைக் கொடுக்கிறது; கல்லாதார்க்கு அறிவைக் கொடுக்கிறது. அதனால் கேள்விச் செல்வம், அறிவு பெற்றவர்க்கும் பயன்படுகிறது; அதனைப் பெறாருக்கும் பயன்படு கிறது. பன்மொழிப் புலவரொருவர் 'அருளாளர்' என்ற தலைப்பில் இராமலிங்க அடிகளைப் பற்றிச் சொற் பொழிவாற்றியதாகவும், அப்பொழிவைக் கேட்டின் புற்றதாகவும் முன்பொரு கடிதத்தில் எழுதியிருந்தாயல்லவா? அதனை நினைவுபடுத்திக் கொண்டால் கேள்விச் செல்வத்தின் அருமைப்பாட்டை நன் குணர்வாய். நீ எவ்வளவு நாள் பயின்றாலும் இராமலிங்கரைப் பற்றியும், அருட் பாவைப் பற்றியும் அவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமா? தெரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள முடியுமா? ஓரிரு மணி நேரத்தில் எவ்வளவு செய்திகளைப் புரிந்து கொண்டாய்! கேள்விக்கு அவ்வளவு ஆற்றலுண்டு.

இத்தகைய ஆற்றல் கொண்ட கேள்வியைச் செல்வம் என்று சொல்வதுடன் அமையாது, சுவையென்றுங் கூறுவர். இன்பம் பயக்குங் காரணம் பற்றி, அதனை அவ்வாறு கூறுவர். சுவையை, இரண்டென்று பாகுபாடு செய்யலாம். ஒன்று வாய்ச்சுவை; மற்றொன்று செவிச்சுவை. இனிப்பு, புளிப்பு முதலிய அறுசுவை களே வாய்ச்சுவை எனப்படும். கேள்வி, செவிச்சுவையெனப்படும். செவிச்சுவையறிந்தவர்களே மேலானவர். ஆயினும் வாய்ச்சுவை