126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
யறிந்த மாந்தரே மிகப் பலராகக் காணப்படுகின்றனர். செவிச்சுவை யுணர்ந்தோர் சிலராகக் காட்சியளிக்கின்றனர். வாய்ச்சுவை எல்லாராலும் எளிதாக அறியப்படுவது; செவிச்சுவை சிலராலேயே அரிதாக உணரப்பெறுவது. சான்றோர், செவிச்சுவையுணர்ந் தாரையே விரும்புவர்; வாய்ச்சுவை மட்டும் அறிந்தாரை வெறுப்பர். செவிச்சுவையை யுணராது, வாய்ச்சுவை யொன்றே அறிந்த மாக்கள் வாழ்ந்தாலென்ன? மாண்டாலென்ன? என வள்ளுவப் பெருந் தகையே வைதாரென்றால், அதனின் மேலாக ஒன்றுங் கூற வேண்டுவதில்லை. தக்க சூழ்நிலையில்லாத காரணத்தாலோ, தன்னால் இயலாத காரணத்தாலோ ஒருவன் கல்வியைக் கற்காமல் இருந்தாலும் இருக்கலாம். ஆனால், கேள்விச் செல்வத்தை மட்டும் இழந்து விடுதல் கூடாது. கற்காவிடினுங் குற்றமில்லை; கேள்வியால் அவன் தெளிவு பெறலாம். செவியுணவாகிய கேள்வயறிவினை யுடையார், எவ்வகைத் துன்பத்திற்கும் ஆளாகமாட்டார். துன்பம் வரினும் அத் துன்பத்தினின்றும் நீங்கிவிடுவர். நீங்குதற்குரிய வழி வகைகளை யறிந்து, அத்துன்பத்திற் சிக்காது, தப்பித்துக் கொள்வர். வறுமை யினால் துன்பம் வரலாம்; அறியாமையால் துன்பம் வரலாம். அத்துன்பத் தால் மனந் தளர்ச்சியடையும். கேள்வியறி வினை யுடையவர். அத் தளர்ச்சிக்கு இடங்கொடார். அத்தளர்ச்சியில் வழுக்கி விழாமலிருக்க, ஊன்றுகோல் போலத் துணை செய்யும் அக்கேள்வியறிவு. வழுக்கு நிலத்தில் நடப்பவனுக்கு, ஊன்றுகோல் எப்படியுதவுமோ அப்படியே, வாழ்க்கை நிலத்தில் நடப்பவனுக்குக் கேள்வியறிவு துணை செய்யும். கேள்விச் செல்வம் நல்லது, சிறந்தது, நலம் பல பயப்பது என்றெல்லாம் எழுதினேன். அதனால் எப்படிப்பட்டவர் சொன்னாலுங் கேட்கலாம். எதை வேண்டுமானாலுங் கேட்கலாம் என்றெண்ணி விடாதே. அப்படிக் கேட்பதினுங் கேளாமலே இருப்பது மேல். நமக்குச் சொல்பவர்கள் படித்திருக்கலாம்; பட்டம் பல பெற்றிருக் கலாம்; பரிசுகளும் பாராட்டுகளும் அடைந்திருக்கலாம். அவை மட்டும் போதா. ஒழுக்கமும் உடையவராக இருக்க வேண்டும். ஒழுக்க முடையார் வாய்மொழிகளே நமக்கு உறுதுணையாவன. அஃதிலார் மொழிகளைக் கேட்பதால் எவ்வகைப் பயனும் இல்லை. எதை வேண்டுமானாலுங் கேட்கலாம் என்பதுந் தவறு, நல்லன |