வற்றையே கேட்க வேண்டும். நல்லனவற்றைச் சிறிதளவு கேட்டாலும் அந்த அளவுக்கு நிறைந்த நன்மையுண்டு. இக்காலத்தில் எவரும் பேசுகின்றனர்; எதையும் பேசுகின்றனர். அவற்றைக் கேளாதே; அங்கெல்லாம் செல்வதே தீது. ஒழுக்கமுடையார் வாய்ச் சொற் களை, நல்ல சொற்களைக் கேட்க முயல்வாயாக. கேட்டுக் கேட்டுப் பழகாத செவிகள் செவிட்டுச் செவி களேயாகும். பணிதல் எல்லார்க்கும் நன்று, இன் சொல்லினதே அறம் என்று நான் உன்னிடம் பலமுறை உரைத்திருக்கின்றேன். அப் பணிந்த மொழியும், இனிய சொல்லும் நீ பெற வேண்டுமானால், நுண்மாண் நுழைபுல மிக்க ஒழுக்க முடையார் வாய்ச் சொற்களைக் கேட்க வேண்டும். கேள்வி என்றவுடன் உனக்குத் தேர்வுத்தாள் நினைவுக்கு வரும். அது கேள்வியன்று; வினா எனப்படும். வினா, வாயின் தொழில்; கேள்வி செவியின் தொழில். செவியின் தொழி லாகிய கேள்விச் செல்வத்தைப் பெற்று, அதன் சுவையுணர்ந்து, இன்பந் துய்த்து வாழ்வாயாக. வாழ முயல்வாயாக. 'செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்" இங்ஙனம் அறிவுடை நம்பி. |