தெரியாமல் தடுமாறுகின்றனர் என்றும் எழுதியிருந்தாய். அதனோட மையாது, அவர் பாடம் நடத்துவது ஒரே 'போர்' மயமாக இருக்கிறதென்று எழுதியிருந்தாய். இந்தப் 'போர்' என்ற சொல்லைக் கண்டதும் மிகமிக வருந்தினேன். உன்னைக்கூட மனத்திற் கடிந்து கொண்டேன். இனிமேல் அவ்வாறு எழுதாதே; எண்ணவுஞ் செய்யாதே. கல்லூரி மாணவர் சிலர், இச்சொல்லை அடிக்கடி பயன் படுத்துவதைக் கேட்டிருக்கிறேன். கேட்கும் பொழுதெல்லாம் ஆறாத் துயரங் கொள்வேன். ஆசிரியர் நிலையும் மாணவர் நிலையும் இவ்வாறு போய்க்கொண்டிருக்கிறதே, கல்வி நிலை என்னாவது? நாட்டின் எதிர்காலம் என்னாவது? என நினைந்து நினைத்துக் கவல்வேன். நாட்டுப் பற்று என் குருதியோடு கலந்துவிட்ட ஒரு பண்பு என்பதை நீ நன்கறிவாய். அதனால்தான் எக்காட்சியைக் காணினும் நாட்டோடு ஒட்டிப் பார்க்க என் மனம் தூண்டுகிறது. உன்னைக் கூட என் மகன் என்ற உறவு முறையிற் கருதாமல், இந்நாட்டு மக்களுள் ஒருவன் என்பது மட்டுமன்று அரசனும் நீ என்ற கருத்திலே தான் இத்தகு அறிவுரைகளை உனக்கு எழுதி வருகின்றேன். எல்லாரும் அறிவுடை மக்களாக ஆகிவிட்டால் தென்னாடாகிய என்னாடு பொன்னாடாகுமே என்று ஏங்கிக் கொண்டேயிருக் கிறேன். அதனால் ஆசிரியர் பாடம் நடத்துவதைப் 'போர்' என்று இனி சொல்லாதே. நீ படிக்கச் சென்றிருக்கிறாய். அதனால் எத்தகு ஆசிரியரா யினும் அவர் சொல்வதைக் கூர்ந்து கேள். கேட்டு நல்லன கொண்டு அல்லன தள்ள வேண்டும். நீரையும் பாலையும் வேறு பிரித்துண்ணும் அன்னத்தை மாணவர்க்கு உவமையாக நம் முன்னோர் ஏன் சொல்லி வைத்தனர். அல்லன தள்ளி நல்லன கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே. நல்லனவும் அல்லனவும் உரைக்கும் ஆசிரியர் பெருமக்கள், அன்றே இருந்திருக்கின்றனர். இருந்த காரணத்தாலே தான் பாலையும் நீரையும் வேறாக்கி உண்ணும் ஆர்வத்தை உவமை கூறியுள்ளனர். நல்லனவே எடுத்துரைக்கும் நன் மக்கள் மட்டும் இருந்திருப்பின் அன்னம் மாணவர் உலகிற் புகுந்திருக்காது. ஏன் இதனை எடுத்துரைத்தேன் என்றால் என்றுமே ஆசிரியர் உலகில், தகுதி பெற்றாரும் பெறாரும் இருந்து வருவது இயல்பாகி |