பாராத நாட்டில் தன்னலம் மேலோங்கி நிற்குமே தவிர, நாட்டு நலம் காணப்படமாட்டாது. இனி, நாட்டுக்குப் பொதுவானவர்களாக நாட்டின் சொத் தாகக் கருதப்படும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர், எழுத்தாளர் போன்ற பெருமக்கள்; தத்தம் நெஞ்சங்களிலே கை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு நாம் அடைந்த தந்நலம் எவ்வளவு? புரிந்த பொதுநலம் எவ்வளவு? இரண்டிலும் பொதுநலம் விஞ்சியிருக் கின்றதா? இல்லையானால் வரும் ஆண்டில் பொதுநலம் விஞ்சச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள், நாட்டுக்காக ஒப்படைக்கப் பட்டவர்கள். அதனால் இவர் தம் பணியில் பொது நலமே விஞ்சியிருக்க வேண்டும். இப்பெருமக்கள் நலனில் அரசு, தானே அக்கறை காட்ட வேண்டும். இப்படித்தான் தாயகத்தைக் காக்க வேண்டும், அப்பொழுதுதான் காக்கமுடியும். இவ்வாறு ஒவ்வொரு குடிமகனும் எண்ணி ஒழுகினால், துள்ளி வரும் பகையைத் தூவென்றுமிழ்ந்து, தள்ளிவிடும் மன நிலையைப் பெற்றவராய்த் தாயகத்தைக் காத்து நிற்கும் தறுகண்மை உற்றவராய் நாம் வாழ்ந்து, நானிலம் போற்ற வளர்ந்து நிற்போம். வாழ்க தாயகம்! வெல்க தாயகம்! "தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?" - பாரதியார். இங்ஙனம் அறிவுடை நம்பி. |