இம்முறைகளையெல்லாம் அறிந்து, இடைவிடாது முயலுவை யாயின் சிறந்த நாநலம் படைத்தவனாக நீ எதிர்காலத்தில் விளங்க முடியும். ஆர்வமும் உழைப்பும் இருப்பின் இத்துறையில் முன்னேற்றங் காணலாம். இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குபவர் கிரேக்க நாட்டு அறிஞர் தெமாத்தனீசு (Demosthenes) என்பராவர். இவர் திக்கித் திக்கிப் பேசும் இயல்பினர்; மெல்லிய குரலில் பேசுவதுதான் இவருக்கு வழக்கம்; இவர் பேசுதற்கு மேடையில் ஏறினால் அவையோர் நகைப்பர். ஆயினும் இத்துறையில் எவ்வா றேனும் வெற்றி பெற்றே தீர்வது என்னும் உறுதிப்பாட்டுடன் பெருமுயற்சியை மேற்கொண்டார். வாயில் கூழாங் கற்களை அடக்கிக்கொண்டு, கடலுக்கு முன் நின்று, கடலொலியையும் மீறி உரத்த குரலில் பேசிப் பேசிப் பழகினார். திக்குவதும் அறவே நீங்கியது. குரலும் ஓங்கியுயர்ந்தது. இறுதியில், உலகத்திற் சிறந்த பேச்சாளர் என்ற நிலையைப் பெற்றார். ஏன் இவர் வரலாற்றை எழுதினேன் என்றால், தளரா உழைப்பிருந்தால் எத்துறையிலும் வெற்றி பெற்றுயரலாம் என்பதை எடுத்துக் காட்டத்தான். இத்தகைய பெருமக்கள் வாழ்க்கை வரலாறுகளையெல்லாம் படிக்கும் பொழுது, ஒவ்வொரு செயலையும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். எவ்வெவற்றைக் கொள்ளலாம், எவ்வெவ்வாறு மேற் கொள்ளலாம் என்றெண்ணிப் பார்த்து முன்னேற முயலுதல் வேண்டும். இவ்வாறு நீயும் முயன்று நாநலம் மிக்குமிக்கு அதனை நானிலம் போற்றவும், அந் நாநலம் நாட்டின் உயர்வுக்கும் மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படவும், நம் பண்பாட்டைக் காக்கவும் பெருந்துணையாகுமாறு நின்று வாழ்க என வாழ்த்துகிறேன். “கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்”. இங்ஙனம் அறிவுடை நம்பி. |