பக்கம் எண் :

16கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

4
திருக்குற்றாலம் சென்று வந்தேன்

அன்புள்ள அரசு,

இயற்கைக் காட்சிகள் நிறைந்து விளங்கும் இடங்களை யெல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவல், என் நெஞ்சத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு நினைவு கலந்த கனவாகும். அக் கனவு சிறிது சிறிதாகச் செயலாகி வருகிறது.

நெடுநாளாகவே குற்றாலம் சென்று மலைவளங் காணல் வேண்டும், அம் மலைவளந்தரும் நலங்களையெல்லாம் நுகர்தல் வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தேன். நான் பள்ளியிற் பயிலும் பொழுதே இவ்வெண்ணங் கருக்கொண்டது. இலக்கியங்கள் அம் மலைநலம் பாடிப்பாடி அக்கருவை வளர்த்தன. தமிழ்தந்த பொதியம், தென்றல் தரும் குன்றம் என்ற புகழுரைகளையெல்லாம் கேட்குந்தோறும் உள்ளங் குளிரும்.

தேவாரப் பெருமக்கள் குற்றாலத்து இறைவனை நினைந்து, தம்மை மறந்து, உள்ளுருகிப் பாடுங்கால், அங்கு ஆர்த்து வீழும் அருவியை, அசைந்தாடும் நறுமலரை, குளிர்புனற் சாரலை, கொழுமலர்ச் சோலையை, வானுயர் மரங்களை, வளந்தரும் இடங்களையெல்லாம் மறந்தாரல்லர். அக்காட்சிகள் அனைத்தும் அவர்தம் அகக் கண்ணை விட்டகன்றில. அதனால் அக்காட்சிகளை அப்படி அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன அவர்தம் பாடல்கள்.

அவர்தம் பாடல்களில் அவ்வோவியங்களைக் காணும் பொழுதெல்லாம் நானும் குற்றாலத்தில் இருப்பதாகவே எண்ணி என்னையும் மறந்து விடுவேன். அருவி ஓசை செவியில் ஆர்க்கும்; மெல்லிய தென்றல் என் நல்லுடல் வருடும். மழலை வண்டினம் நல்லியாழ் செயும். விரிமலர் பலப்பல நறுமணம் வீசும். இத்தனையும்