பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்17

என் கற்பனையில். கற்பனை கலைந்ததும் தன்னினைவு தலை தூக்கும், கவல்வேன்; அயர்வேன், அக்காட்சிகளை என்று காண்பேன் என்று.

ஆண்டுச் சென்று திங்கட் கணக்கில் தங்கித் தூய நல்லுடலோடு மீளும் பெருமக்கள் அக் குற்றால வளத்தையும் நலத்தையும் வியந்து வியந்து பாராட்டுவதையும் கேட்டிருக் கின்றேன். இக்கேள்வியும் என் ஆவலைக் கிளர்ந்தெழச் செய்யும். கிளர்ந்தெழுந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பயன் தந்து விட்டது தம்பி. அண்மையில் குற்றாலம் சென்று வரும் வாய்ப்புப் பெற்றேன். வற்றாத இன்பங் கண்டு வாரி வாரி உண்டு மகிழ்ந்தேன் களித்தேன்.

இப் பருவத்துக்கு ஆங்கே வந்தார் அனைவருள்ளும் நானே பெரும்பயன் பெற்றேன் என்று பெருமிதத்தோடு வரைகின்றேன். வானமுகட்டை முத்தமிடும் மலை முகடுகள், அம் முகட்டில் தவழ்ந்து செல்லும் முகிற் கூட்டங்கள், அம் முகில்கள் அகங் குளிர்ந்து பொழியும் மழைத் துளிகள், துளிகள் ஒன்று திரண்டு விழும் தூய வெள்ளருவி, அருவியால் வளம் பெறுங் காடுகள், சோலைகள், வயல்கள், இவை தந்த பசுமை இவ்வனைத்தையும் என் கண்ணாரக் கண்டேன், கண்டேன் என்று சொல்வதினும் கண் களால் உண்டேன் என்று சொல்வது மிகப் பொருந்தும்.

மலை உச்சியிற் பெய்த நீர் ஒன்றாகிப் பச்சிலைகளில் உராய்ந்து, ஓடி வந்து, மலைச்சரிவுகளில் முழங்கி, இறங்கும் அவ்வருவிகளில் ஓயாது குளித்தேன். தண்டுளிச் சாரலோடு வீசுந் தென்றற் காற்றத் தனையும் என் உடற்குள்ளேயே புகவிட்டேன். சட்டையிட்டு உடலை மூடினேனல்லேன். நீ மழலை மொழிக் குழவியாக இருந்த பொழுது என் மார்பிலும் தோளிலும் எவ்வாறு தவழ்ந்தோடி விளையாடினையோ அதைப் போலவே தென்றலையும் என் மீது தவழ்ந்தாடவிட்டேன். சுருங்கக் கூறின் தென்றற் காற்றில் முங்கிக் குளித்தேன் என்றுதான் கூறுதல் வேண்டும்.

இயற்கையின் எழில் கண்டு, குளிரருவிப் புனல் படிந்து மலர் மணத்தை அள்ளிவரும் தென்றல் நுகர்ந்து என் கவலையெல்லாம் களைந்து பேரின்பத்தில் திளைத்திருந்தேன். அதனால் ஓராண்டுக்கு மேலாக என் நெஞ்சின் வலப் பக்கத்தில் நிலைத்து நின்று என் உயிரை வதைத்து வந்த அந்த வலியும் பெரும்பகுதி நீங்கப் பெற்றேன்.