நானே பெரும்பயன் பெற்றேன் என்று எழுதினேன். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல இன்பங்களையும் நான் பெற்றேன். தம்பி! நான் பெற்ற இன்பத்தையே எழுதிக் கொண்டிருக் கிறேன். அந்த இன்பம் அப்படி என்னை எழுதத் தூண்டுகிறது. இருப்பினும் குற்றாலக் காட்சி, அமைப்பு இவற்றையும் எழுதுவேன். எழுதும் பொழுதே இடையிடையே உனக்கு வேண்டிய அறிவுரை களையும் எழுதுவேன். மதுரையிலிருந்து இரவு இரண்டே முக்கால் மணியளவில் புறப்படும் தொடர் வண்டிக்குச் சென்றோம். வண்டி புறப்படும் நேரத்திற்குத்தான் செல்ல வேண்டியதாயிற்று. அதனால் படிகளில் ஏறி இறங்கும் போது தட்டுத் தடுமாறி, கீழே விழுந்து விடாமல், தொடர் வண்டி நிற்கும் இடத்தையடைந்தோம். வண்டியில் நுழைய இடமில்லை. எப்பொழுதுமே வண்டி புறப்படுவதற்கு முன் குறைந்தது அரைமணி நேரத்திற்கு முன்பே சென்று நிலையத்தில் இருக்க வேண்டும் என்று உன்னிடம் பலமுறை சொல்லியிருக் கின்றேன் அல்லவா? ஆனால் அறிவுரை சொல்லும் நான் இப்பொழுது தவறிவிட்டேன். சொல்வது எளிது; செய்வது அரிது. சொன்னபடி செய்திருந்தால் எளிதாக இடங் கிடைத்திருக்கும். நம் மக்களுக்கு வண்டியில் ஏறவும் தெரிவதில்லை; இறங்கவுந் தெரிவதில்லை. வரிசையாக ஏறவேண்டுமென்றோ உள்ளிருப்போர் இறங்கிய பின் ஏறவேண்டுமென்றோ இவர்கள் உணர்வதுமில்லை. ஒழுங்கு முறையைப் பின்பற்றி நடந்தால் பொருள் இழப்போ உடல் வலியோ வேறு பிற தொல்லைகளோ ஏற்படா. அடிதடிகளும், சண்டை சச்சரவுகளும், வசவுகளும் விளையா. மூன்றாம் வகுப்பில் ஏறும் மக்கள் அன்று மக்களாக நடந்து கொள்ளவில்லை. விலங்குத் தன்மைதான் நிலவக் கண்டேன். மூப்படைந்தோர் ஏற வழியின்றித் தடுமாறினர்; மாதர் தவித்தனர். இரண்டொருவர் கீழே விழவும் செய்தனர். குழந்தைகள் நெருக்கடி தாங்க மாட்டாமல் வீரிட்டழுதன. பொருள்கள் பறிபோயின. ஒழுங்குமுறையே நமக்கு இன்னும் விளங்கவில்லை. உரிமை பெற்ற நாட்டில் வாழ்கிறோம்! இவ்வளவு கூட்டத்திற்கும் காரணம் வில்லிப்புத்தூருக்கு அருகில் ஒரு திருவிழா நடை பெறுவதுதான். இதையறிந்தாவது நிலையத் தலைவர் இரண்டொரு வண்டிகளைத் தொடுத்திருக்கலாம். அதுதானுஞ் செய்தாரல்லவர். |