நீராடுவார்தம் ஆர்ப்பரிப்பு இவை எல்லாம் இன்பமயம். அம்மலைக் காட்சி, காண்பாரை அப்படியே மலைத்து நிற்கச் செய்யும் இயல்பினது. நாங்கள் தங்கியிருந்த இடம் கண்ணாடி மனை (Glass Bungalow) எனப்படும். இப்பொழுது கண்ணாடி காணமுடியாது. அது, முன்பு கண்ணாடிகள் அமைத்துச் செய்யப்பட்டிருந்ததாம். இப்பொழுது அது கற்சுவர் வீடாகத்தான் காட்சியளிக்கிறது. இருப்பினும் பழைய பெயர்தான். முன்றிலில் ஒரு சிறிய பூங்கா, சண்பகம், சந்தனம், தென்னை, கமுகு முதலிய பல்வகை மரங்களில் வகைக்கொன்று அங்கே உண்டு. பல்வகை மலர்ச் செடிகளும் உண்டு. பின் பக்கம் பெரிய தென்னந்தோப்பு, அத்தோப்பில் பாக்கு மரங்களும் தென்னையோடு போட்டியிட்டு வளர்ந்திருக்கும். அக் கமுக மரங்கள் அணி வகுத்தாற் போலத் தோப்பின் இடையில் இருமருங்கும் ஒரே வரிசையாக நெடுந்தூரம் காணப்பெறும். அவ் வணிவகுப்பின் இடையே நானும் என் நண்பர்களும் நடந்து செல்லுங்கால், என் இரு மருங்கும் படை அணி வகுத்து நிற்பதாகவும் உடன்வருவோர் ஐம்பெருங் குழுவினராகவும், நான் மூவேந்தருள் ஒருவராக - முடியரசராக - அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளுவதாகவும் கற்பனை செய்து கொண்டு பெருமிதத் துடன் நடந்து செல்லுவேன். அக் குற்றாலம் என்னை அவ்வா றெல்லாம் எண்ணச் செய்தது. தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் போது குற்றாலத்தை நெருங்கியதும் நமக்கு இடப்பக்கமாக ஒரு வழி பிரியும். அவ்வழி யேகின் சிறிது தொலைவில் உள்ள புலி யருவியை அடையலாம். இஃது இப் பெயர் பெறக் காரணம் தெரியவில்லை. அவ்வருவி, பெண்களும், ஆண்களும் தனித்தனி நீராடுவதற்காக நன்முறையில் செப்பஞ் செய்யப்பட்டிருக்கும். ஆதலின் அருவியின் செயற்கை யமைப்பையே காண்பாய். அருவி, மூன்று கிளையாகப் பிரிந்து வீழுமாறு அமைக்கப் பெற்றிருக்கும். அருவி வீழும் இடத்திற்கு அருகில் கேணி போன்றதொரு தொட்டியிருக்கும். அத் தொட்டி நிரம்பித் தண்ணீர் வழிந்தோடும். அடுத்தபடி, கீழே பெண்கள் நீராடுவதற்காகக் கட்டப் பட்டிருக்கும் இடம் உண்டு. அதனருகில் கூழாங்கற்கள் பெரியனவும் |