பக்கம் எண் :

24கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

சிறியனவுங் கொண்டு, மாடங்களமைந்த சுவரொன்று எழுப்பப் பெற்றிருக்கும். அச்சுவர் கண்ணுக்கினிய காட்சியாகும். சிறிது தள்ளி நின்று பார்ப்பார்க்குப் பெரிய பெரிய முத்துகள் பதித்துச் செய்யப்பட்ட சுவரெனத் தோன்றும். இவ் வருவியில் நீராடி வழிபாடு செய்ய விழைவார்க்கு ஆங்குச் சிறிய அழகிய கோவில் ஒன்றும் கட்டப்பட்டிருக்கும். சுருங்கக் கூறின் இப் புலியருவி செயற்கை அழகாற் பொலியும்.

இனி, குற்றாலத்துள் நுழையின் நம் எதிரில் தோன்றுவது பேரருவியே. இஃது ஆங்குள்ள அருவிகளிற் பெரிதாயிருப்பது பற்றி இப்பெயர் பெற்றது. இவ்வருவி நம்மை எதிர்கொண்டு வரவேற்பது போல, உயரிய இடத்தினின்றும் அகன்று விரிந்து பரவிச் ‘சோ’ என்ற பேரொலியோடு வீழும். மலையுச்சியிலிருந்து ஓடிவந்து உயர்ந்த ஒரு சரிவில் கீழே இறங்குகிறது. அஃது ஒரு பனை உயரத்திலிருந்து, கீழே உள்ள பெரிய ஆழமான சுனையொன்றில் தடதட வென வீழ்கிறது. அது வீழும் இடத்தைப் ‘பொங்குமாங்கடல்’ எனப் புகல்கின்றனர். அங்கிருந்து வழிந்து அகலமான பாறையிற் பரவி வீழ்கிறது. வீழும் இவ்விடந்தான் நீராடற்கேற்ற வகையில் காப்பமைவு களுடன் நன்கு கட்டப்பட்டிருக்கிறது. அருவியில் நின்று நீராடு வோர்க்குப் பற்றுக் கோடாக வலிய நீண்ட இரும்புக் கம்பிகள் அமைத்து மூன்று வரிசைகள் கட்டப்பட்டிருக் கின்றன.

நீயும் நின்னுடன் வருவோரும் இக் கம்பிகளைப் பற்றி நின்றே நீராடல் வேண்டும். இது நல்ல பாதுகாப்பான இடந்தான். இருப்பினும் தவறி விழுந்து விடின் ஏதம் விளையாதிருத்தற் பொருட்டு, நீண்ட வளைவுச் சுவரொன்று எழுப்பப் பெற்றிருக்கிறது. இச் சுவருக்கும் மலைக்கும் இடையேதான் அருவி வீழும். அதனால் ஏதம் ஒன்றும் நிகழ்ந்து விடாது. இருப்பினும் மக்கள் ஒழுங்கு முறை தவறுவதால் அஃதாவது வரையறை மீறுவதால் ஏதத்துக்கு ஆளாகின்றனர். கம்பி மீது ஏறி நின்றும் வளைவுச் சுவர்மீது ஏறிநின்றும் நீராடும் குறும்பர் சிலர், அருவியின் வேகத்தால் அல்லலுக்கு ஆளாகின்றனர். வரை யறையை மீறுவதால் நேரும் விளைவு. நாம் எச்சரிக்கையாக இருந்தால் துன்பமே இல்லை.

நான் குற்றாலத்தில் முதன் முதற்கண்டது இப்பேரருவியே யாகும். முதலில் அங்கு நீராட அஞ்சினேன். பார்க்கும்போதே