அச்சம். அருகில் சென்றதும் அதன் பேரோசை அச்சத்தை இன்னும் பெருக்கியது. உடன் வந்தோர் என் அச்சங்கண்டு, எள்ளி நகைத்தனர். எனினும் நீராட மறுத்து விட்டேன். என்னிடம் பரிவு கொண்ட அவர்கள் மற்றோரருவிக்கு அழைத்துச் சென்றனர். பேரருவியிலிருந்து சிறிது தொலைவு மேற்கே சென்று, இடப்பக்கம் திரும்பி, மேலேறிச் சென்றால் அங்கே ஓரருவி காணப்படும். அதனைச் ‘சிற்றருவி’யென்பர். பெயர்தான் சிறிது. வீழும் வேகமோ பெரிது. அங்கும் அச்சந்தான். இருப்பினும் துணிந்து நீராட முற்பட்டேன். இவ்வருவியில் மட்டும் நீராடுவதற்கு இரண்டணா கொடுக்க வேண்டும். காவலர் ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார். இவ் வருவாயைக் கொண்டு அருவியை இன்னும் செவ்வைப்படுத்த எண்ணியுள்ளனர். இக்கட்டுப்பாட்டை மீறிச் சிலர் மலையின் மேற்புறம் ஏறிவந்து, காவலர் அறியாமல் குளிக்கின்றனர். வெற்றிக் களிப்பும் அடைகின்றனர். இவரையெல்லாம் கொண்ட நாடு, உரிமை பெற்றுத் தன்னாட்சி செலுத்தும் நாடென்ற பெயர் பெறுமா? “சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் மக்களைக் கொண்ட வரை யறுக்கப்பட்ட நிலமே நாடு எனப்படும்” என்று அரசியற் கலை வல்லுநரான வில்சன் என்ற பெருமகனார் கூறியுள்ளார். நம் நாட்டுப் பெருமக்கள் மட்டுங்கூறாது விடுத்தனரா? கூறினர்; அழகிய பாவடிவிலே, நாம்தான் அவற்றையெல்லாம் உன்னுவதில்லை. முன் ஒருமுறை உனக்கு எழுதியுள்ளேன், ‘எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்ற ஒளவையின் பொன்மொழியை. சட்டத்திற்குட்பட்டு வாழும் நல்லவர்களைக் கொண்ட நாடுதான் நாடெனப்படும். அதனால் சட்டத்தை மீறாமல் நீங்களும் அங்கு நடந்து கொள்ள வேண்டும். நேரம் ஆகிறது. அடுத்த மடலில் இது பற்றித் தொடர்ந்து எழுதுவேன். 29.8.1956 உன் தந்தை முடியரசன் |