26 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
6 குற்றாலத்து அருவிகள் அன்புள்ள அரசு, சென்ற மடலின் தொடர்ச்சியாகக் குற்றாலம் பற்றியே இம்மடலிலும் எழுதுகிறேன். குற்றாலத்தில் மேற்கே ஏறக்குறைய இரண்டரைக்கல் தொலைவில் ஐந்தருவி என்றோர் அருவியும் உண்டு. அங்குச் செல்லும் வழியில் காலஞ்சென்ற டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுடைய இல்லமும் காணப்படும். 'பொதியமலைப் பதிப்பகம்' என்றெழுதிய பலகையொன்று அவ்வில்லின் முன்புறந் தொங்கும். ஐந்தருவிக்குச் செல்வோர் செல்வராக இருந்தால் மகிழுந்திற் செல்வர். நடுத்தர வகுப்பினர் மாட்டு வண்டியில் ஊர்வர். நாங்களோ நடந்தே சென்றோம். ஊர்திகளிற் செல்வோர் இயற்கை வளங்களை முழுமையாகக் கண்டு களிக்க இயலா தல்லவா? அதனால் நாங்கள் நடந்தே சென்றோம். நீங்களும் பலராகச் செல்வதால் நடந்து செல்வது மகிழ்ச்சியாக இருக்கு மென்று கருதுகின்றேன். ஆயினும் அனைவரும் எம் முடிவுக்கு வருகின்றனரோ அதன்படி நடந்து கொள். இவ்வருவி ஐந்து பிரிவாகப் பிரிந்து வீழ்வதால் இப்பெயர் பெறுகிறது. இங்கும் நீராடற் கேற்ற காப்பமைவுகள் உண்டு. பேரருவியின் மேற்பகுதியில், சண்பகாதேவி என்றோர் அருவியுண்டு, சிற்றருவியிலிருந்து மேலே ஏறிச் செல்ல வேண்டும். வளைந்து வளைந்து செல்கின்ற மலை வழியில் மூச்சுத் திணற ஏறிச்சென்றேன். வழி முழுதும் வானுயர் மரங்கள், தேக்கு, சந்தனம், சாதிக்காய் முதலான பல்வகை மரங்கள் அடர்ந்த காடுகள், கற்பாறைகள், ஒற்றையடிப்பாதை இவற்றை யெல்லாங் கடந்து, மலைமேல் ஏறிச் சென்றால் சண்பகா தேவியை அடையலாம். |