பக்கம் எண் :

28கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் நான் தாண்டிக் கொண்டிருந்தேன். இடையில் தங்கி விடலாமென்றால் ஒரே காடு. கொடிய விலங்குகள் வருமோ என்றஞ்சினேன். மேலும், வழிகாட்ட வந்தவர் என்னைப் பார்த்து 'இவரெங்கே ஏறப்போகிறார்' என்று ஏளனம் செய்தார். எனக்கு மானவுணர்ச்சி தலை தூக்கி நின்றது. இம்மான வுணர்ச்சியும் மேலே கூறிய அச்சவுணர்ச்சியும் சேர்ந்து என்னைப் பிடித்துத் தள்ளிக் கொண்டே சென்று தேனருவிக்கருகில் சேர்த்தன. கண்டேன் தேனருவியை. களைப்பெல்லாம் எங்கோ பறந்தது. சாரல் எங்களைக் குளிர்வித்தது. அங்கே பெற்ற இன்பம் என்னால் எழுத முடியாத இன்பம் அப்பா, எலும்பெல்லாம் நரம்பெல்லாம் அவ்வின்பம் ஓடி ஓடிப்பாய்வது போன்ற உணர்ச்சி.

இத் தேனருவி மிகவுயர்ந்த இரண்டு மலைகளுக்கிடையே நூல் பிடித்தாற் போல ஒரே அளவினதாக வீழ்கிறது. இரண்டு மலைகளும் நெருங்கி நிற்கின்றன. உச்சியில் ஒரு பெரும்பாறை, இரண்டற்கும் நடுவே மூடிக் கிடக்கின்றது. அப்பாறைக்குக் கீழிருந்து வீழும் அருவி, ஒரு குகைக்குள்ளிருந்து வெளி வருவது போலிருக்கும். அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிடர் வலித்தமையால் நீண்டநேரம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு உயரத்திலிருந்து வீழ்கிறது அவ்வருவி, அருவியின் இடப்பக்கத்துப் பாறையில், செய்து வைத்தாற் போன்ற அழகிய பெரிய தேனடைகள் தொங்கிக் கொண்டிருக்கும். அதனாற்றான் இவ்வருவி தேனருவி யெனப் பெயர் பெற்றது. இது கீழே வீழ்ந்து மலைப்பாறைகளின் வழியாக வளைந்து வளைந்து ஓடி வந்து கீழிறங்குகிறது. இதுதான் சண்பக அடவி அருவியாகிறது. இன்னும் ஓடி ஓடி மூன்று பிரிவாகப் பிரிந்துசென்று, ஒரு பக்கம் சிற்றருவி யென்றும் மற்றொரு பக்கம் புலியருவியென்றும் இடையே பேரருவியென்றும் கீழே இறங்கு கிறது போலும்.

தேனருவியிலிருந்து இறங்கும் பொழுதும் எச்சரிக்கையாக இறங்க வேண்டும். இறங்கி வரும்பொழுது மலை மேலிருந்து நிலத்தைப் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய மட்டும் ஒரே பசுமையான காட்சி! தரையே தெரியவில்லை. எங்கும் பசுமையான வயல்கள். உயரத்திலிருந்து பார்ப்பதால் வரப்புகள் புலனாகவில்லை. ஒரே வயல்போலத் தோன்றியது. அதைச் சுற்றிலும் உயர்ந்த தென்னந் தோப்புகள். இக்காட்சி ஒரு பெரிய ஏரிபோற் காணப்பட்டது. உயர்ந்த தோப்புகள் பெரிய கரை போலவும் நடுவே அமைந்த