பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்29

வயற்பரப்பு நீர் நிலை போலவும் காற்றில் துவளும் நாற்றுகள் நீர்ப்பரப்பிற் படிந்து படிந்து செல்லும் அலைகள் போலவும் காட்சியளித்தன.

சிறிது நேரம் நின்றபடியே அவ்வெழிலை கை புனைந்தி யற்றாக் கவின்பெறு வனப்பைக் கட்புலனாற் சுவைத்துக் கொண் டிருந்தேன். இறங்குகையில் அங்குக் கிடக்கும் பலவகைப் பாறைகள், செய்து வைத்தன போல விந்தை காட்டின. அனைத்தும் கை புனைந்தியற்றாதனவே. சில கற்கள் வடித்தெடுத்த 'இலிங்கங்கள்' போற் காணப்பட்டன. அவற்றைக் கண்டதும் இலக்கியச் செல்வர் இராய. சொக்கலிங்கனார் எழுதிய 'குற்றால வளம்' என்ற கட்டுரை நினைவுக்கு வந்தது. அவர் அக்கட்டுரையில், 'நமது புராண உலகத்தார் சில தல இலிங்கங்கள் உளியினாற் செய்யப்படாதன என்று பெருமை கூறுகின்றனர் அல்லவா? அவை இன்ன மலைகளில் இயல்பாகக் கிடந்து கொணரப்பட்டனவாகவே இருத்தல் வேண்டும்' என்று கூறுகின்றார். ஆம்; இக் கூற்று உண்மையே. இம் மலைப் பாங்கரில் அத்தகு கற்கள் அமைந்து கிடக்கின்றன.

உண்மை இவ்வாறிருக்க இத்தகு கற்களைச் 'சுயம்புலிங்கம்' என்றும் 'விடங்கன்' என்றும் விளம்பி, தானே தோன்றிய லிங்கம் என்றும் உளியினாற் செய்யப்படாதன என்றும் அச் சொற்களுக்குப் பொருளும் கூறுவர். இயல்பாகவே இலிங்கம் போல அமைந்து கிடந்த இத்தகு கற்களைக் கொணர்ந்து கோவிலில் அமைத்து அவற்றிற்கு மேற்கூறிய பெயர்களையும் சூட்டிவிட்டார்கள். இவ்வுண்மை புலனாகாவாறு, 'சுயம்பு லிங்கம்' எனவும் 'விடங்கன்' எனவும் பெயர் கூறி அதனால் ஒரு தனி 'மகத்துவம்' கற்பித்துக் கயிறு திரித்து விட்டனர். உண்மைக்குத் திரை போட்டுவிட்டனர். உண்மையை மறைப்பதாற்றானா கடவுளுண்மை பரவும்? இப் பொய்க் கதைகளால், - போலிக் கூற்றுகளாற்றான், அது பழிக்கப்படு கிறது என்று நான் கருதுகின்றேன். முகில் எப்பொழுதுமே கதிரவனை மறைத்துக் கொண்டிருக்க முடியுமா? ஒருநாள் உண்மை வெளிப் பட்டே தீரும். சரி; கடிதம் நீண்டு கொண்டே செல்கிறது. குற்றாலம் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டியுளது. அடுத்த மடலில் அதனை எழுதுகிறேன்.

05.09.1956

உன் தந்தை
முடியரசன்.

