பக்கம் எண் :

30கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

7
குற்றாலத்திற் பெற்ற இன்பம்

அன்புள்ள அரசு,

குற்றாலக் காட்சிகளும் அதன் வளங்களும் நலங்களும் அவற்றால் நான் பெற்ற இன்பங்களும் அளவிடற்கரியன. ஆதலின் இரண்டு மூன்று மடல்களில் அவற்றைப் பற்றி எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் முதலிற் பேரருவியில் நீராட அஞ்சினேன் என்று எழுதியிருந்தேனல்லவா? பிறகு துணிந்து, சிறிது சிறிதாகத் தலையை நீட்டிக் கடைசியில் அருவிக்குள் நிற்கும் ஆற்றலைப் பெற்று விட்டேன். அருவியில் நின்ற பிறகுதான் அந்த இன்பம் எத்தகையது என்று கண்டுகொண்டேன். நெடுநேரம் நிற்பேன். நண்பர்கள் கட்டாயத்தால் அருவியினின்று மீள்வேன். அச்சம் அகலாதிருப்பின் அந்த இன்பத்தை அடைந்திருக்க முடியாது. அஞ்சும் நெஞ்சில் இன்பம் அரும்பாது; அச்சம் தொலைந்தால் இன்பம் மலரும் எனும் உண்மையையும் உணர்ந்தேன்.

நாளொன்றுக்கு ஐந்து முறையேனும் நீராடுவேன். ஒவ்வொரு முறையும் நிறைய எண்ணெய் தேய்த்துக் கொள்வேன். வீட்டில் எண்ணெய் முழுக்குக்குத் தேய்த்துக் கொள்வதைவிட அதிகமாகவே தேய்த்துக் கொள்வேன். அருவியில் நின்று மீண்டால் தலைமுடி பஞ்சு போலாகி விடும்; உடல் அப்பழுக்கின்றி மிளிரும்; எண்ணெய்ப் பசை சிறிது கூடக் காணல் முடியாது. இவ்வருவியில் நீராடுவோர் சிலர், சோப்புத் தேய்த்துங் குளிக்கின்றனர். நாகரிகம் என்று கருதுகின்றனர் போலும். அருவியில் நீராடுவோர் தேய்த்துக் கொள்ள எதையுமே பயன்படுத்த வேண்டியதில்லை. உடல் அவ்வளவு தூய்மையாகிவிடும்.

நான் பன்முறை நீராடிப் பயன் பெற்றது போல நீயும் உன் தோழர்களும் பன்முறை நீராடிப் பயன்பெறுங்கள். பேருக்குத்