பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்31

தலைகாட்டி மீளாதீர்; நான் அருவிகளிற் பலகால் நீராடித் தென்றலிலும் மூழ்கினேன். அதனால் மெய்யின்பம் பெற்றேன். அருவிநீர் பருகி, ஆண்டுக் கிடைக்கும் கனியருந்தி வாய் இன்பம் பெற்றேன். அருவியும், மலையும், மலைதவழ் முகிலும் பிறவுங்கண்டு கண் இன்பங் கொண்டேன். வண்ண மலர்களை வருடிவரும் காற்றை முகர்ந்து மூக்கின்பம் பெற்றேன். அருவியோசை, வண்டொலி, சோலை விளைக்கும் இன்னிசை இவற்றைக் கேட்டுச் செவியின்பம் பெற்றேன்.

இவ்வாறு ஐம்புல இன்பம் பெற்றுத் தொடர்மலைக் கெதிரில் இருக்கும் சிறிய குன்றின் மீதமர்வேன். கண்ணுக் கெதிரில் பெரு மலையும் மலை வீழருவியும் தோன்றும். மெல்லிய பூங்காற்று உடலில் தோயும். அவ்வின்பம் மாந்தி அப்படியே கண்மூடி மவுனியாவேன். அடடா! ஒரே இன்பமயம்! பேரின்பமயம்! அவ்வின்பத்தில் திளைத்துத் திளைத்து எழுவேன். நீயும் நுகர்ந் தாற்றான் அவ்வின்பத்தின் அருமையையும் பெருமையையும் காணலாகும் - இல்லையில்லை - உணரமுடியும்.

மலைக்கெதிரில் குன்றொன்று உண்டென்று உரைத்தே னல்லவா? அதனருகில் சிறிய பூங்காவொன்றும் உண்டு. அப் பூங்காவிற் சிறார் விளையாடி மகிழ ஊசல் உண்டு; சருக்குப் பாறையுண்டு. குற்றால இன்பத்தில் மூழ்கிய பெரியவர் சிலர், அவ்வின்பப் பெருக்கால் தம்மை மறந்து ஊசலாடினர்; சருக்கி விளையாடினர். எனக்கென்னவோ அக்காட்சி அருவருப் பாகவே பட்டது. இளஞ்சிறார் ஊசலாடியும் சருக்கி விளையாடியும் மகிழ்ந்து சிரித்து ஆடுவது காணின் நமக்கும் மகிழ்வு தோன்றும். மயிலாட்டம் கண்ணுக்கினிமை பயக்கும்; வான்கோழி ஆடினால் நின்று காண்பவருண்டோ? குழந்தைகள் மூன்றுருளிவண்டி ஓட்டினால் நன்றாக இருக்கும். நீயும் நானும் அவ்வண்டியில் ஏறியமர்ந்தால் ஏளனந்தானே செய்வர்! ஏன் இதையெழுதுகிறேன் என்றால் நீயும் தோழர்களும் அப்படி முறைதவறி நடத்தல் கூடாது என்பதற் காகவே.

இங்கே கண்ட மற்றொரு காட்சியையும் கட்டாயம் உனக்கு எழுத வேண்டும். கல்லூரி மாணவர் சிலர் உங்களைப் போலவே இன்பப் பயணமாக அங்கு வந்திருந்தனர். அவர்கள் நடந்து கொண்ட முறை பலருக்கும் வெறுப்பைத் தந்தது. அப் பூங்காவின்